அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் இணைந்து நடிக்கும் படே மியான் சோட் மியானின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. படத்தை அடுத்த ஆண்டு ரம்ஜானில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
2019-ம் ஆண்டு சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான வார் திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் நடிகர் டைகர் ஷெராஃப் நடித்தார். அந்த பிளாக்பஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது ”படே மியான் சோட் மியான்” என்ற மற்றொரு இரண்டு ஹீரோ படத்திற்கு தயாராகி வருகிறார் டைகர் ஷெராஃப். ஆக்ஷன் எண்டர்டெய்னரான இந்த படத்தில் அக்ஷய் குமாரும் இணைந்து நடித்து வருவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலி அப்பாஸ் ஜாபர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், ஜாக்கி பாக்னானி, ஹிமான்ஷு கிஷன் மெஹ்ரா மற்றும் அலி அப்பாஸ் ஜாபர் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இதற்கிடையே படே மியான் சோட் மியான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து படம் வெளியீட்டுத் தேதியுடன் படத்தின் ஒரு புகைப்படத்தையும் நடிகர் அக்ஷய் குமார் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வெளியீடு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு புகைப்படத்தில் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ராணுவ உடையில் எதிரியை நோக்கி துப்பாக்கியால் சுடுவதைக் காட்டுகிறது. அந்த புகைப்படத்தில் டைகர் ஷெராஃப் ஒரு மெஷின்கன்னுடனும், அக்ஷய் ஒரு நவீன கைத்துப்பாக்கியுடன் காணப்படுகிறார்கள். இதில் டைகர் ஷெராஃப்-ன் தோற்றம் வார் படத்தை நினைவூட்டும் படியும் அக்ஷய் மீசையுடனும் காட்சியளித்துள்ளனர்.
நடிகர் அக்ஷய் குமார் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவர்கள் இருவரும் பாலைவனத்தின் நடுவில் பைக்கில் செல்வதையும் விமானம் ஒன்று அவர்கள் பின் பறப்பதையும் காட்டுகிறது. இந்த புகைப்படத்துடன் “2024 ரம்ஜான் அன்று திரையரங்கில் உங்களை பார்க்கிறேன்” என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.
படே மியான் சோட் மியான் படம் ஸ்காட்லாந்து, லண்டன், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முக்கிய இடங்களில், புகழ்பெற்ற தொழில்நுட்ப மற்றும் சர்வதேச அதிரடிக் குழுவினருடன் படமாக்கப்பட்டுள்ளது.







