மேற்கு வங்கத்தில் இன்று காலை பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பரகானாஸ் மாவட்டத்தில் உள்ள துத்தாபுகூரில் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 24 நார்த் பர்கானாஸ் பகுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில், ”இன்று காலை 10 மணியளவில் ஜகநாத்பூர் பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இந்த விபத்தில் இதுவரை ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தீ முழுமையாக அணைக்கப்படவில்லை. காயங்களுடன் சிலர் மீட்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பராசத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். வெடி விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. துத்தாபுகூரில் உள்ள காவல்துறையினரின் வட்டாரங்களின்படி, துத்தாபுகூர் வெடி விபத்தில் மேலும் பலர் இறந்திருக்கலாம் மற்றும் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.