ஆந்திராவில் காகித தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், சித்தூரில் இயங்கி வந்த காகித தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் அதிகாலையில் பற்றிய நெருப்பு, காகிதம் உள்ளிட்ட பொருள்களில் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தினர்.
இந்த தீ விபத்தில், தொழிற்சாலையின் உரிமையாளர் பாஸ்கர், அவரது மகன் டில்லிபாபு மற்றும் நண்பர் பாலாஜி என 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும் உரிமையாளரின் மகன் டில்லிபாபுவுக்கு இன்று பிறந்த நாள் கொண்டாடப்பட இருந்த நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் கண்ணீர் மல்கக் கூறினர்.
-ம.பவித்ரா








