இந்தோனேசியாவில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியே எரிமலை போல் காட்சியளித்துள்ளது.
இந்தோனேசியா தலைநகரமான ஜாகர்டாவில் இருந்து 200கி.மீ தொலைவில் அரசாங்க நிறுவனமான பெர்டாமினா நடத்தி வரும் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. அந்த நிலையத்தில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அதிலிருந்து எழுந்த தீ பிழம்புகள் வானம் வரை பரவி அப்பகுதியை புகை மண்டலமாக மாற்றியுள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் அளித்துள்ளனர்.
விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரிடர் மீட்பு குழுவினர் அங்கிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை சம்பவ இடத்திலிருந்து வெளியேற்றினர். சுமார் 15 பேருக்கு லேசான காயங்களும், மேலும் 3 பேர் இருக்கும் இடத்தை குறித்து பரிசோதித்து வருவதாக மீட்பு குழு தெரிவித்தது. இந்த சம்பவத்தில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக நிறுவனம் தெரிவித்தது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்றும், ஆனால் மின்னல் தாக்கப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







