அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நிலை 2-ல் உள்ள இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் வீதம் ஆயிரத்து 200 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இரண்டாம் அலகின் மின் உற்பத்தி பிரிவில் உள்ள மின்மாற்றியில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இரண்டாவது அலகில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மின் உற்பத்தியை தொடங்க ஒரு மாதத்திற்கு மேலாகும் என மின்வாரிய அலுவலர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.







