தமிழகத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு -மாசு கட்டுப்பாட்டு வாரியம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான ஆறு வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டிக் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக், தெர்மோகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலைப்…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான ஆறு வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டிக் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக், தெர்மோகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர்க்கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தலாம் என்றும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோல் பொருட்களை பயன்படுத்த அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலைகளுக்கு வண்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் மற்றும் வண்ணப் பூச்சுகளை பூசக்கூடாது என்றும், சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிலைகளை அழகுபடுத்த வண்ணப் பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக இயற்கைப் பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.