வானகரம் அருகே தனியார் எண்ணெய் குடோன், பர்னிச்சர் குடோன், டைல்ஸ் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
சென்னை மதுரவாயலை அடுத்து வானகரம் பகுதியில் மிஸ்டர் கோல்டு எண்ணெய் குடோன் உள்ளது. இதன் அருகிலேயே பிளைவுட் குடோன், டைல்ஸ் குடோனில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சேமித்து வைக்கும் குடோன்கள் உள்ளன. நேற்றிரவு, எண்ணெய் குடோனில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்த 2 பிளைவுட் பர்னிச்சர் குடோன், மற்றும் 6 டைல்ஸ் குடோன் ஆகியவற்றிற்கும் தீ வேகமாக பரவியது. இங்குள்ள குடோன்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து மதுரவாயல், பூந்தமல்லி, விருகம்பாக்கம், கீழ்ப்பாக்கம், எழும்பூர், கே.கே.நகர், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு தீயணைப்பு நிலையங்களிலிருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எண்ணெய் குடோன் அருகே எண்ணெயுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 டேங்கர் லாரிகளிலும் தீப்பற்றியதால் அந்த லாரிகள் கொழுந்து விட்டு எரிந்தன. அருகிலிருந்த பர்னிச்சர், டைல்ஸ் குடோன்களிலும் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், சுவாசப் பிரச்சனை ஏற்பட்டது. தீ விபத்து நடந்த பகுதிக்கு அருகில் வசிக்கும் பொதுமக்களை போலீசார் அப்பகுதியில் இருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள், மேலும் எண்ணெய் குடோனில் ஏற்பட்ட தீயை அணைப்பது கடும் சவாலாக உள்ள நிலையில் இரசாயண திரவத்தை கொண்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இரவு நேரம் என்பதால் பணியாளர்கள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீ விபத்தில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. எண்ணெய் குடோனில் ஏற்பட்ட தீவிபத்து பின்னர் மற்ற இடங்களுக்கும் பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே மதுரவாயல், வானகரம், போரூர் பகுதியில் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக தீ விபத்து ஏற்பட்ட வானகரம் பகுதியில் கனமழை பெய்யத் தொடங்கியதால் தீயணைக்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.