கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிய இருதய சிகிச்சை பிரிவு மையத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார், அவருடன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பால்வளத்துறை அமைச்சர் நாசர், நடிகர் பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பண்டிகை காலம் என்பதால் இந்த வாரம் ஞாயிற்று கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படாது எனவும், இரண்டாம் தவணை செலுத்தாத 20 லட்சம் நபர்களுக்கு அடுத்த முகாமில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இதுவரை 67% நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எழுவர் விடுதலை குறித்து முதலமைச்சர் அக்கறையுடன் உள்ளதாகவும், இதுகுறித்து குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.







