தமிழகத்தை உலுக்கிய திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில், நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி குறித்தும், கோவை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரம் குறித்தும் விரிவாக பார்க்கலாம்..
தமிழகத்தை உலுக்கிய திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் நிதிநிறுவன உரிமையாளர்களுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும் 171 கோடி, அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு ‘பாசி டிரேடிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற ஆன்லைன் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. நிதி நிறுவன இயக்குநர்களாக திருப்பூரைச் சேர்ந்த கதிரவன் இவரது மகன் மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோர் செயல்பட்டனர். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாக கூறி, 41ஆயிரம் பேரிடமிருந்து, ரூ.980 கோடி, வசூலித்தனர். முதலீடு செய்தவர்களுக்கு ஒருசில மாதங்களுக்கு மட்டும், வட்டித் தொகையாக காசோலைகளை வழங்கினர். இந்த காசோலைகள் மூலம் அதிக வட்டித் தொகை கிடைத்ததால், இதை நம்பி மேலும் பல கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். இதற்காக வழங்கப்பட்ட காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திருப்பத் தொடங்கியது. அதிர்ச்சி அடைந்த பொது மக்கள், திருபூர் போலீசில் புகார் செய்தனர். திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலிசார் கதிரவன், மோகன் ராஜ். கமலவள்ளி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கமலவள்ளியை திருப்பூர் டி.எஸ்.பி, ஆய்வாளர்கள் சண்முகய்யா, மோகன்ராஜ் ஆகியோர் கடத்திச் சென்று பணம் பறித்தாக புகார் எழுந்தது. இவர்கள் மீது ஆட்கடத்தல் பணம் பறிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் காவல்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தியதில், கமலவள்ளியை கடத்தி பணம் பறித்த வழக்கில் மேற்கு மண்டல ஐஜியாக பணியாற்றிய பிரமோத் குமாருக்கு தொடர்பிருப்பதாக கூறி சிபிஐ அதிகாரிகள், கைது செய்து 5 நாள் விசாரணை நடத்தினர்.
பின்னர், இந்த வழக்கின் விசாரணையானது கோவை டான்பிட் நீதமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு நடைபெற்றபோதெ கதிரவன், இறந்தார்.
மோகன்ராஜ், கமலவள்ளி இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி, சிபிஐ தரப்பில் கோவை டான்பிட் நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஒன்பது ஆண்டுகளாக சாட்சி விசாரணை நடைபெற்று வந்தது. அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு சாட்சியம் என இரு தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட இருந்தது. முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தர அதன் இயக்குநகர்கள் தயாராக இருப்பதாகவும், இந்த வழக்கில் தீர்ப்பளிக்க தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், மோகன்ராஜ் மனு தாக்கல் செய்தார். கடந்த பிப்ரவரி மாதம் இந்தவழக்கில் தீர்ப்பு வழங்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.பி.ஐ., தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி , இடைக்கால தடையை நீக்கியதோடு, கோவை சிறப்பு நீதிமன்றம், விசாரித்து தீர்ப்பளிக்க கடந்த 5ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பான உத்தரவு நகலை, கடந்த சிலதினங்களுக்கு முன் சி.பி.ஐ., தரப்பு வழக்கறிஞர், கோவை டான்பிட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து, இவ்வழக்கில் ஆகஸ்ட் 22ல் தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி ரவி அறிவித்திருந்த நிலையில், 26 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தீர்ப்பினை ஒத்திவைத்தார்..அதன்படி தீர்ப்பை குற்றம் சாட்டப்பட்ட மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளி இருவரையும் குற்றவாளி என அறிவித்த நீதிபதி ரவி, மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளிக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.171 கோடி 74 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் 1402 பேர் சாட்சியளித்துள்ளதாகவும், முறையாக விசாரித்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் இந்த வழக்கில் சேர்த்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் சிபிஐக்கு கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி, காவல்துறை உயர் அதிகாரிகளே கைது செய்யப்பட்ட இந்த வழக்கில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







