அடையாளம் தெரியாதவர்கள் மூலம் தேசிய கட்சிகளுக்கு ரூ.15,000 கோடி நன்கொடை- ஆய்வில் தகவல்

அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் கடந்த 16 ஆண்டுகளில் தேசிய கட்சிகளுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் என்கிற அமைப்பு தெரிவித்துள்ளது.   பாஜக, காங்கிரஸ்…

 

பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 8 தேசிய கட்சிகள் மற்றும் திமுக, அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதி, ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம்  உள்ளிட்ட 27 மாநில கட்சிகளின் வருமான வரி தாக்கல் விபரங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தில் இணைக்கப்பட்டுள்ள நன்கொடை ரசீதுகளின் அடிப்படையில் நடத்திய ஆய்வில் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது.

கடந்த 2020-2021ம் நிதியாண்டில் மட்டும் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் 690.67 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது ஏடிஆர் என்று அழைக்கப்படும் அந்த அமைப்பு. கடந்த 2004- 2005 நிதியாண்டிலிருந்து 2020- 2021ம் ஆண்டு நிதியாண்டுவரை தேசிய கட்சிகள் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து ரூ.15,077.97 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

கடந்த 2020-2021ம் நிதியாண்டில், 8 தேசிய கட்சிகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் மூலம்  மொத்தம் 426.74 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளதாகவும், 27 மாநிலக் கட்சிகள் அந்த நிதியாண்டில் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து மொத்தம் 263.92 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளதாகவும் ஏடிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது. 2020-21 நிதியாண்டில் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து காங்கிரஸ் கட்சியே அதிக நன்கொடைகளை பெற்றுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. அக்கட்சிக்கு ரூ.178.78 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பாஜகவிற்கு 100.5 கோடி ரூபாய் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து நிதி கிடைத்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து பெற்ற 690.67 கோடி ரூபாயில் 47.06 சதவீதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டவை என்றும் ஏடிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.