நிதியமைச்சர் ஆடியோ விவகாரம் – மட்டமான அரசியல் செய்வோருக்கு விளம்பர தேடி தர விரும்பவில்லை என முதலமைச்சர் சாடல்…

நிதியமைச்சர் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து மட்டமான அரசியல் செய்பவர்களுக்கு பதிலளித்து, அவர்களுக்கு விளம்பரம் தேடித் தர விரும்பவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக சாடியுள்ளார். தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கடந்த…

நிதியமைச்சர் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து மட்டமான அரசியல் செய்பவர்களுக்கு பதிலளித்து, அவர்களுக்கு விளம்பரம் தேடித் தர விரும்பவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக சாடியுள்ளார்.

தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கடந்த மாதம் டெல்லி செய்தியாளர்களிடம் பேசியதாக சமூகவலைதளங்களில் ஆடியோ ஒன்று பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 12 மணி நேர வேலை சட்டத்திருத்தம், Dmk Files உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மத்தியில் பிடிஆர் பேசியதாக வெளியான அந்த ஆடியோ பரபரப்பை கிளப்பியது.

சர்ச்சைக்குரிய அந்த ஆடியோ தொடர்பாக, தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருந்தார். அதில் இந்த ஆடியோவில் இடம் பெற்றிருக்கும் குரல் என்னுடையது இல்லை. இது வேண்டும் என்றே மோசடி கும்பல்களால் சித்தரிக்கப்பட்டது என்று விளக்கம் அளித்திருந்தார்.

மேலும் ஆடியோவை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். கடந்த 2 வருடங்களில் தன்னை பற்றி ஏராளமான அவதூறுகள் பரப்பப்பட்டுள்ளன. என்னையும் முதலமைச்சரையும் பிரிக்க எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால் அது எதுவும் பலிக்காது என விமர்சித்திருந்தார்.

இதற்கு பிறகு பிடிஆர் தொடர்பான இரண்டாவது ஆடியோவை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் முதல்வரின் மகனும், மருமகனும் தான் கட்சியே என்ற உரையாடல்கள் இடம் பெற்றிருந்தது. உடனடியாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டதோடு, அறிக்கையையும் வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தார். அவர் அளித்திருந்த அந்த விளக்கத்தில் , திராவிட மாடலை ஜீரணிக்க முடியாத சிலர் இப்படி போலியான ஆடியோக்களை வெளியிட்டுள்ளனர். அடுத்த தலைமுறையின் நம்பிக்கை உதயநிதி ஸ்டாலின். எனக்கு சபரீசன் மிகவும் நம்பகமான ஆலோசகர். நான் பேசியதாக வெளியான ஆடியோ ஒலிப்பதிவு முழுக்க முழுக்க சித்தரிக்கபப்ட்டவை. இதுபோன்ற ஒலிப்பதிவுகள் உலக அளவில் கிடைக்கின்றது. பிளாக்மெயில் லட்சியம் கொண்ட கும்பலின் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது. நாங்கள் அனைவரும் ஒரு இயக்கமாக, ஒரு குடும்பமாக இருக்கிறோம் என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

https://twitter.com/ptrmadurai/status/1651157513994379265?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1651157513994379265%7Ctwgr%5Ed08a4c4e48cd04588d075759a4a47f71f5d27f98%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fnews7tamil.live%2Fcontroversy-audio-issue-finance-minister-pdr-explanation.html

இந்நிலையில் உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் பிடிஆர் ஆடியோ சர்ச்சை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ தொடர் மூலம் சமூக வலைதளங்களில் மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுகுறித்து ஏற்கனவே பிடிஆர் பழனிவேல்ராஜன் இரண்டு முறை விரிவான விளக்கமளித்திருப்பதாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்பவர்களுக்கு பதிலளித்து, அவர்களுக்கு விளம்பரம் தேடித் தர விரும்பவில்லை என்றும் முதலமைச்சர் காட்டமாக சாடியுள்ளார்.

மேலும் சட்ட மசோதாக்கள் தொடர்பாக பேசிய அவர், சட்டமன்றங்களில் இயற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம், இந்தியா முழுவதும் எதிரொலித்திருப்பது குறித்த கேள்விக்கும் முதலமைச்சர் பதிலளித்துள்ளார். அதில், சமூக நீதி மற்றும் மாநில சுயாட்சிக் கொள்கைகளுக்கு தமிழ்நாடுதான் தலைநகரமாக திகழ்வதாக கூறியுள்ளார். அந்த அடிப்படையில் தான் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் முந்தைய அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை சிஏஜி அறிக்கை உறுதி செய்திருப்பதாக கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதுதொடர்பாக அடுத்தகட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு ஊழல் வழக்குகள் நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் கூறியுள்ளார். உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தே தீர வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.