கத்தார் நாட்டில் பிரம்மாண்டமாக தொடங்கும் FIFA உலகக்கோப்பை கால்பந்து திருவிழா

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக 220 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்துள்ளது கத்தார். தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக 440 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கால்பந்து கழகத்தின், ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து…

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக 220 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்துள்ளது கத்தார். தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக 440 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கால்பந்து கழகத்தின், ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022 இந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் உலகிலேயே அதிக ரசிகர்கள் கொண்ட இந்த போட்டிகள் இம்முறை மேற்காசிய நாடுகளில் ஒன்றான, வடகிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள கத்தார் நாட்டில் நடைபெறவுள்ளது.

உலகின் முன்னணி விளையாட்டுகளில் ஒன்றான கால்பந்து விளையாட்டின் மீதான ரசிகர்களின் ஆர்வம் பெரியதாகும். என்னதான் கிரிக்கெட், டென்னிஸ், கூடைப்பந்து என உலகில் பல முன்னணி விளையாட்டுகள் இருந்தாலும், உலகெங்கிலும் அதிக ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள ஒரே விளையாட்டு கால்பந்து விளையாட்டு தான்.

அரபு நாடுகளில் முதல் முறையாக உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெறவுள்ளது. இதற்காக கத்தார் பல வருடங்களாக தங்கள் நாட்டில் கட்டுமானத்திற்காக சுமார் 220$ பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளது. இதுவே உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தியதில் அதிகப்படியான செலவினங்களை கொண்ட முதல் தொடராக அமைந்திருப்பது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

அரபு நாடுகளில் நடைபெறும் முதல் உலகக்கோப்பை கால்பந்து தொடர் என்பதால், பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக இந்தமுறை கத்தாரில் நடைபெறவுள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்க 1.5 மில்லியன் ரசிகர்கள் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது வெளிநாடுகளிலிருந்து 1,300 விமானங்கள் கத்தார் நாட்டிற்கு வந்து செல்கின்றன. எனவே அந்நாட்டில் பொதுமக்கள் பயன்படுத்தக் கூடிய கட்டுமானங்கள் உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தி அவற்றை மேம்படுத்தி உள்ளது கத்தார் அரசு. இந்த உலக கோப்பைக்காகவே கத்தார் 220 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்திருப்பது, கடந்த 2010 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்கா செலவு செய்ததை விட 60 மடங்கு அதிகமான தொகையாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக லுசாலி நகரில் உணவு விடுதிகள் மற்றும் கோல்ஃப் மைதானங்களுக்காக 45 பில்லியன் டாலர்களும், தி பேர்ல் பகுதியில் உள்ள தீவுகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் உணவகங்களுக்கு 15 பிலியன் அமெரிக்கா டாலர்களும், தோஹா மெட்ரோ பணிகளுக்காக 36 பில்லியன் அமெரிக்க டாலர்களும் செலவழிக்கப்பட்டுள்ளன.

32 அணிகள் பங்கேற்கும் கத்தார் உலக கோப்பை தொடர் A,B,C,D முதல் H வரையிலான அணிக்கு தலா 4 அணிகள் வீதம் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 32 அணிகள் இடம்பெற்றுள்ளதால் ஒவ்வொரு குழுவிலும் உள்ள நான்கு அணிகளும் தங்கள் குழுவில் உள்ள சக அணிகளுடன் போட்டியிட வேண்டும்.

ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் சூப்பர் 16 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 16 சுற்றில் முன்னேறும் 8 அணிகள் காலிறுதி போட்டிகளில் போட்டியிடும். அதன் பின்னர் அரயிருதி போட்டிகளும், டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.

கத்தார் உலகக்கோப்பை தொடரில் ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக 440 மில்லியன் டாலர்களை அறிவித்துள்ளது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு. 2014 ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அறிவிக்கப்பட்ட மதிப்பை விட இது 40 மில்லியன் டாலர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.