சேலம் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் சிட்டி மற்றும் ஈரடுக்கு பேருந்து நிலையம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டம் தொடங்கப்பட்டது. இதன் முதல் நிகழ்ச்சியாக வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் 2-ம் கட்டமாக சேலம் மண்டலத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இன்று மற்றும் நாளை என இரண்டு நாள் பயணமாக சேலம் சென்றுள்ள அவர் சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் நேரடி கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார்.
இதற்காக விமானம் மூலம் ஓமலூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊழியர்களின் வருகை, மக்கள் நல திட்ட பணிகளின் நிலை போன்றவை குறித்து ஆய்வு நடத்திய அவர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் அவர்களின் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். முதலமைச்சரின் இந்த திடீர் ஆய்வால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அங்கு இருந்த பொதுமக்களிடமும் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது ஒரு மூதாட்டி ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற தனது கணவர் இறந்த நிலையில் தாம் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என மனு அளித்தார். அதை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அதே போல் சேலம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.92.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.
இது தவிர சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின்கீழ், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களின் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
மேலும் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களின் தொழில் துறை மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய முதலமைச்சர், அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.
- பி. ஜேம்ஸ் லிசா











