தேனியில் சமூக நலத் துறை அலுவலகத்தில் பெண் திட்ட அலுவலர் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட
அலுவலகத்தில் திட்ட அலுவலராகப் பணியாற்றி வருபவர் ராஜராஜேஸ்வரி (52). போடியைச் சேர்ந்த உமாசங்கர் (52) என்பவர் அந்த அலுவலகத்தில் 2015ஆம் ஆண்டு ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்றியுள்ளார். அப்போது, அவர் அலுவல் பணி கோப்புகள் மறுசீரமைப்பு போன்ற வேலைகளில் தனது கைவண்ணத்தைக் காட்டி வந்ததால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு மாவட்டம், வெள்ளக்கோவில் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக பணி இடமாற்றமும் செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஐந்தாண்டு காலமாக பழிவாங்கும் எண்ணத்தோடு காத்திருந்த உமாசங்கர் திங்கள்கிழமை அலுவலகத்துக்கு வந்து ராஜராஜேஸ்வரியின் தலை, கை மற்றும் தோள்பட்டை போன்ற இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த ராஜராஜேஸ்வரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட திட்ட அலுவலர் தண்டபாணி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் ஆகியோர்
சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, போலீஸார் உமாசங்கரை கைது செய்து தேனி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்
மேலும், அரிவாளால் தாக்கப்பட்ட ராஜராஜேஸ்வரி தேனி அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.








