மூவர்ண கொடிக்குப் பதிலாக காவிக்கொடி மாற்றப்படும் என்று கர்நாடக முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் பேசிய அவர், ஆயிரம் ஆண்டு கால வரலாற்றை கணக்கில் எடுத்துக்கொண்டாலும் காவிக்கொடிதான் நமது நாட்டின் அடையாளமாக இருந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். காவிக்கொடி தியாகத்தின் குறியீடு என குறிப்பிட்ட ஈஸ்வரப்பா, அதன் காரணமாகவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதனை நாள்தோறும் ஏற்றி வருவதாகத் தெரிவித்தார்.
தற்போது காவிக்கொடி அதற்குரிய மரியாதையை பெறாமல் இருக்கலாம் ஆனால், என்றாவது ஒருநாள் நமது நாட்டின் தேசியக் கொடியாக நிச்சயம் காவிக்கொடி மாறும் என அவர் கூறியுள்ளார். இதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிச்சயம் ஒருநாள் மூர்வணக் கொடிக்கு மாற்றாக காவிக்கொடி பறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி சொல்வதால் நாம் மூவர்ணக் கொடியை ஏற்றவில்லை என தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, அரசியல் சாசனத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதால் அதற்குரிய மரியாதையை நாம்(பாஜக) அளிப்பதாகக் கூறியுள்ளார்.
இதற்கு முன்பும், இதேபோன்ற கருத்தை ஈஸ்வரப்பாக கூறி இருந்தார். இந்தியா ஒரு நாள் இந்து நாடாக மாறும் என்றும், செங்கோட்டையில் காவிக்கொடி பறக்கும் என்றும் கடந்த பிப்ரவரி 9ம் தேதி அவர் கூறி இருந்தார். இதற்கு முன்னாள் முதலமைச்சர் சீதாராமைய்யா கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.









