கடையநல்லுார் அருகே குளத்தை காணவில்லை என விவசாயிகள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு பரபரப்பு புகார்
தென்காசி மாவட்டம், கடையநல்லுார் தாலுகாவிற்கு உட்பட்ட மங்களாபுரம் பகுதியில் பன்னீர் பெரியகுளம் என்ற பெயரில் சுமார் 3 ஏக்கர் 50 சென்ட் அளவில் ஒரு குளம் இருந்தது. இந்த குளத்தின் மூலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. சில வருடங்களுக்கு முன்பு இந்த குளத்திற்கு வரும் கால்வாயை மர்ம நபர்கள் சிலர் அரசு அதிகாரிகள் உதவியுடன் பட்டா வாங்கி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது, பொதுப்பணித்துறை நில வரைபடத்தில் குளம் உள்ள சூழலில் வருவாய் துறையினர் குளத்தை பட்டா மாற்றம் செய்து மர்ம நபர்களுக்கு கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை அறிந்த விவசாயிகள் எங்கள் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்த பன்னீர் பெரியகுளம் தற்போது காணவில்லை எனவும், சில மாபியா கும்பலை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் விவசாய நலங்கள் தரிசாகி அழியும் தருவாயில் உள்ளதாகவும், எனவே காணாமல் போன குளத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என தென்காசி மாவட்டம் ஆட்சித் தலைவருக்கும், முதலமைச்சர் தனிப்பிரிவினருக்கும் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் கடையநல்லுார் வட்டாச்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்திய போது, இந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்து திகைத்து நின்றுள்ளார். குளத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், விவசாய நிலங்களை பாழாக்கி உள்ள நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து குளத்தை மீட்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-அனகா காளமேகன்