தோட்டத்தில் திருடியதாக இளைஞர்ரை மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் கர்னல் (Karnal) மாவட்டத்தில் உள்ள கர்ஹி பரல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நவாப், ஆரிப், ராஜூ, இக்ரம். இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை, பக்கத்து கிராமமான, ராணா மஜ்ராவுக்கு வந்தனர்.
அங்கு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த, இக்பால் என்பவரை நவாப்பும், ஆரிப்பும் உசுப்பி, தங்கள் கிராமத்துக்கு அழைத்துச் சென்றனர். நவாப்பின் பண்ணைத் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தவர் இக்பால். இந்நிலையில் தோட்டத்தில் இருந்த டிராக்டரின் சில பகுதிகளை காணவில்லை என்றும் அதை இக்பால்தான் திருடியிருக்க வேண்டும் என்றும் கூறினார். இக்பால் அதை மறுத்துள்ளார்.
இதையடுத்து பொய் சொல்வதாகக் கூறி, இக்பாலை மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்ட அவர்கள், சரமாரியாகத் தாக்கியுள்ளனர். கதறியுள்ளார் இக்பால்.
இதுபற்றிய தகவல், இக்பாலின் சகோதரர் தயாப்புக்கு தெரிய வந்ததை அடுத்து, அவர் தனது கிராமத்தினருடன் சம்பவ இடத்துக்கு சென்று அவரை விடுவிக்கும்படி கூறினர். ஆனால், அவர்கள் பேச்சைக் கேட்காத நவாப் உள்ளிட்டோர் தொடர்ந்து அவரை தாக்கியுள்ளார். இதையடுத்து தயாப், போலீசில் புகார் செய்தார்.
விரைந்து வந்த போலீசார், இக்பாலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பலத்த காயமடைந் துள்ளார். இதையடுத்து ராஜூ மற்றும் நவாப்-பை கைது செய்த போலீசார், மற்றவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.







