’வாட் எ கருவாட்’- தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’க்கு வயது ஏழு

தனுஷ் நடித்து வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படம் வெளியாகி ஏழு வருடம் ஆனதை ஒட்டி, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #7YearsOfBlockBusterVIP என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். தனுஷின் பொல்லாதவன், ஆடுகளம், சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல்…

தனுஷ் நடித்து வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படம் வெளியாகி ஏழு வருடம் ஆனதை ஒட்டி, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #7YearsOfBlockBusterVIP என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

தனுஷின் பொல்லாதவன், ஆடுகளம், சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வேல்ராஜ், முதன்முதலாக இயக்குநராக அறிமுகமான படம், ’வேலையில்லா பட்டதாரி’. இந்தப் படத்தை தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில்  தனுஷ் தயாரித்து, நடித்தார். இது அவருக்கு 25 வது படம்.

அமலாபால், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, விவேக், சுரபி உட்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற அம்மா சென்டி மென்ட் பாடல் சூப்பர் ஹிட்டானது. அதோடு, வாட் எ கருவாட், ஊதுங்கடா சங்கு, வேலையில்லா பட்டதாரி ஆகிய பாடல்களும் வரவேற்பை பெற்றன.

நடிகர் தனுஷ், வேலையில்லாத பட்டதாரியாக நடித்திருந்திருந்தார். எளிமையான கதையும் யதார்த்தமான திரைக்கதையும் விவேக்கின் காமெடியும் ரசிகர்களிடையே இந்தப் படத்தைக் கொண்டு சேர்த்தன. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், தனுஷை சிறந்த பாடலாசிரியராகவும் பெருமைபட வைத்தது.

அதோடு இந்த படம் சர்ச்சையையும் சந்தித்தது. தனுஷ், சிகரெட் பிடித்து நடந்து வருவது, ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி பற்றி படத்தில் இடம்பெற்ற வசனம் ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பின.

இந்நிலையில், இந்தப் படம் வெளியாகி இன்றோடு ஏழு வருடம் ஆனதை அடுத்து, #7YearsOfBlockBusterVIP என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.