சிவகார்த்தியேன் நடித்துள்ள ’டாக்டர்’ படத்தின் அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு அந்தப் படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ’டாக்டர்’. நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷனும் தயாரித்துள்ளது.
இந்தப் படம் கடந்த மார்ச் 26 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டதால்,
டாக்டர் படம் திட்டமிட்டபடி ரிலீஸாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டாக்டர் படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர். இதுகுறித்து தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தினமும் ’டாக்டர்’ அப்டேட் கேட்டு பலரும் தொடர்பு கொள்கிறீர்கள். தயாரான ஒரு படத்தை கையில் வைத்துக்கொண்டு, கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார ரீதியான கட்டுப்பாடுகள் அனைத்தையும் ஒரு தயாரிப்பாளராக, தாங்கிக் கொண்டிருக்கிறேன். படம் நல்லமுறையில் ரிலீஸ் ஆக எனது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறேன்.
மறுபக்கம், கொரோனா காரணமாக சுற்றங்களையும், நட்புகளையும் இழந்து கொண்டிருக்கிறோம். இதுபோன்ற சூழலில் டாக்டர் ரிலீஸ் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







