பிரபல முன்னாள் திரைப்பட சண்டைப் பயிற்சி இயக்குநர் ஜூடோ கே.கே.ரத்தினம் உடல்நலக்குறைவால் காலமானார்.
குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் ஜூடோ கேகே ரத்தினம். சினிமாத்துறைமீது ஏற்பட்ட மோகத்தின் காரணமாக சென்னைக்கு வந்த இவர், தனது சொந்த முயற்சியால் திரைத்துறையில் தனக்கென தனி இடம் பிடித்தார்.
1959 ஆம் ஆண்டு தாமரைக்குளம் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநராக அறிமுகமானார். அன்று தொடங்கிய இவரது திரை வாழ்க்கை இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த தலைநகரம் திரைப்படம் வரை தொடர்ந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட வெவ்வேறு மொழிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும் கலைமாமணி விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
ஜூடோ கேகே ரத்தினத்திற்கு, மூன்று மகன்களும், ஐந்து மகள்களும் உள்ளனர். 93 வயதான இவருக்கு, வயது மூப்பு காரணமாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று மாலை சுமார் 4:30 மணியளவில் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் உள்ள தனது சொந்த வீட்டில் அவர் காலமானார்.
இதையடுத்து, ஜூடோ கேகே ரத்தினத்தின் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது உடல், வடபழனியில் உள்ள திரைப்பட ஸ்டண்ட் ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.







