மேட்ரிமோனி மூலம் விவாகரத்தான பெண்களிடம் பணமோசடி செய்த நைஜீரிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரம்பூரை சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்தான நிலையில் மறுமணம் செய்து கொள்வதற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ளார். அவரை தொடர்பு கொண்ட நபர் ஒருவர், நெதர்லாந்தில் மருத்துவராக பணிபுரிவதாகக் கூறி செல்போன் மூலம் பேசி வந்துள்ளார்.
நாளடைவில் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண்ணிடம் லட்சக் கணக்கான ரூபாய் பறித்துள்ளார். ஒருகட்டத்தில் சந்தேகமடைந்த பெண் மேட்ரிமோனி நிர்வாகத்திடம் விசாரித்தபோது மோசடி கும்பலின் கைவரிசை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் டெல்லி உத்தம் மாவட்டத்திலுள்ள துவாரகா பகுதியில் பதுங்கியிருந்த மோசடி கும்பலைச் சேர்ந்த இருவரை மடக்கிப் பிடித்தனர்.
நைஜீரியாவைச் சேர்ந்த பாலினஸ் மற்றும் கிளேடாஸ் ஆகியோரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், மேட்ரிமோனி வெப்சைட் மூலம் 15க்கும் மேற்பட்ட விவாகரத்தான பெண்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்தது. இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார். இதில் தொடர்புடைய பெண் உட்பட மேலும் இருவரை தேடி வருகின்றனர்.








