பேய் விரட்டுவதாக பெண்ணை அடித்து துன்புறுத்திய சாமியார் கைது!

பேய் விரட்டுவதாக பெண்ணை அடித்து துன்புறுத்திய சாமியார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்த கம்மான்மேட்டு பகுதியில் கருப்பனார் சுவாமி கோயில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தாளம்பாடி சேடப்பட்டி…

பேய் விரட்டுவதாக பெண்ணை அடித்து துன்புறுத்திய சாமியார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்த கம்மான்மேட்டு பகுதியில் கருப்பனார் சுவாமி கோயில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தாளம்பாடி சேடப்பட்டி புதூரை சேர்ந்த 50 வயதான அனில்குமார் என்பவர் இந்த கோயிலை புதுப்பித்து தனியாக மடம் போல் மாற்றி பராமரித்து வருகிறார்.

இந்த நிலையில் அம்மாவாசை, பெளர்ணமி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குறி சொல்வது, பில்லி, சூனியம் எடுப்பது, பேய் விரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு அப்பகுதி மக்களிடையே தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டார். இந்த சூழலில் தன்னுடைய விளம்பரத்தை பெரிதுபடுத்த நினைத்த அனில்குமார் புதுசத்திரத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து வந்து தான் பெண்களுக்கு பேய் விரட்டுவதை வீடியோவாக பதிவு செய்து அதனை யூடியூபில் வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரும் சாமியார் சொன்னடி வீடியோவை பதிவு செய்ததையடுத்து குறிப்பிட்ட வீடியோ காட்டுத் தீ போல் அப்பகுதியில் வேகமாக பரவத்தொடங்கியது.

அந்த வீடியோவில் பெண்கள் சிலரை உட்காரவைத்து சாமியார் மது போதையில் சாட்டையால், பிரம்பால் மற்றும் கன்னத்தில் கொடூரமாக அறைவது போன்ற காட்சிகள் இருந்தன. இதனை பார்த்த சிலர் சம்பந்தப்பட்ட சாமியார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். குறிப்பாக காதப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சஞ்சிவ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சாமியார் அனில்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ராசிபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே தங்களுடைய பிரச்சனைகளை தெரிவிக்கும்போது யாரேனும் பொய் கூறினால் மட்டுமே சாமியார் கோபப்பட்டு தாக்குவதாகவும் எனவே அதனை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். பேய் விரட்டுவதாக கூறும் சாமியார் அனில்குமார் மஞ்சநாயக்கனூர் கம்மாமேடு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கோயில் கட்டியுள்ளாரா எனவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.