கோவையில் புதிதாகக் கட்டப்பட்ட நூலகமான பெரியார் அறிவுலகத்தில், அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் ஆகிய பதிப்பகங்களின் பெயரில் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், புத்தகக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது கட்டுரையில் எழுதியிருந்தார். இது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்தப் புத்தகங்கள் கடந்த திமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டதாக தவெகவும், தவெக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டதாக திமுகவும் குற்றம் சாட்டி வருகின்றன.
இதனிடையே, பெரியார் அறிவுலகத்தில் இருந்த போலிப் புத்தகங்கள் அகற்றப்பட்டதுடன், அகல் விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது. மேலும், பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் ரூ.28.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2,293 போலியான ஏ.ஐ புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் சுமார் ரூ.27,52,352 மதிப்பிலான அகல் விளக்கு பப்ளிகேஷன் நிறுவனத்தின் 2,200 போலிப் புத்தகங்களும், ரூ.97,476 மதிப்பிலான ஃபீனிக்ஸ் பப்ளிகேஷன் நிறுவனத்தின் 93 புத்தகங்களும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை ஏ.ஐ. மூலம் அச்சிடப்பட்ட, வரலாற்றுப் பிழைகள் கொண்ட போலிப் புத்தகங்கள் என்றும், கடந்த டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கோவையைத் தொடர்ந்து தென்காசியிலும் போலிப் புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் எழுத்தாளர்களும் வாசகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.




