FMGE தேர்வில் 77% பேர் தோல்வி!

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்றுவதற்கான FMGE தகுதித் தேர்வில், அக்டோபர் மாதத் தேர்வு எழுதியவர்களில் சுமார் 77 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்த இந்தியர்கள், நாட்டில் மருத்துவராகப் பணியாற்ற வேண்டுமானால் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தகுதித் தேர்வான Foreign Medical Graduate Examination (FMGE)-ல் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்நிலையில், 2026 அக்டோபர் மாதத்திற்கான FMGE தேர்வு முடிவுகளை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (NBEMS) செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதில், தேர்வெழுதியவர்களில் 9,354 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 31,539 பேர் தோல்வியடைந்துள்ளனர். இதன் மூலம் தேர்ச்சி விகிதம் 22.9 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

77 சதவீதம் பேர் தோல்வி!

அக்டோபர் 31-ம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்வில் மொத்தம் 42,113 தேர்வர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் 1,190 பேர் தேர்வுக்கு வரவில்லை. மேலும், 30 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 150 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். ஆனால், 14,613 பேர் 125 முதல் 149 மதிப்பெண்கள் வரை பெற்று தேர்ச்சி வாய்ப்பை இழந்துள்ளனர். இதில் 5,365 பேர் 140 முதல் 149 மதிப்பெண்கள் வரை பெற்று, தேர்ச்சி பெறுவதற்குத் தேவையான மதிப்பெண்ணை நெருங்கியும் தோல்வியடைந்துள்ளனர்.

தேர்வின் கடினத்தன்மை குறித்து புகார்!

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற FMGE தேர்வில் குறைந்த அளவிலான தேர்ச்சி விகிதம் பதிவானதைத் தொடர்ந்து, வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் NBEMS சில மாற்றங்களை அறிவித்தது. அதன்படி, வினாத்தாளில் 30 சதவீதம் எளிதான கேள்விகள், 50 சதவீதம் மிதமான கேள்விகள், 20 சதவீதம் கடினமான கேள்விகள் இடம்பெற வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரைத்திருந்தது. மேலும், தேர்வர்கள் தாங்கள் அளித்த பதில்கள், சரியான விடைகள் மற்றும் ஒவ்வொரு கேள்விக்கும் வழங்கப்பட்ட மதிப்பெண்களைப் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

ஜூன் மாதத் தேர்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கும் வகையில் அக்டோபர் 31-ம் தேதி கூடுதல் தேர்வு நடத்தப்பட்டது. இருப்பினும், அக்டோபர் மாத வினாத்தாள் மிதமானது முதல் கடினமானது வரை இருந்ததாகவும், பரிந்துரைக்கப்பட்ட வினாக்களின் கடினத்தன்மை விகிதம் பின்பற்றப்படவில்லை என்றும் தேர்வர்கள் தெரிவித்துள்ளதாக FAIMA அமைப்பின் தேசிய FMG பொறுப்பாளர் டாக்டர் சமர் குமார் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்தைவிட தேர்ச்சி விகிதம் உயர்வு!

அக்டோபர் மாதத் தேர்வின் தேர்ச்சி விகிதம் 22.86 சதவீதமாக உள்ளது. இது முந்தைய டிசம்பர் – ஜனவரி மாதத் தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடக்கூடியதாக உள்ளது. அதேசமயம், ஜூன் 2026 தேர்வில் தேர்ச்சி விகிதம் சுமார் 12 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஜூன் மாதத் தேர்வில் இடம்பெற்ற வீடியோ அடிப்படையிலான கேள்விகள், தேர்வர்களுக்குப் புதிதாகவும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் வகையிலும் இருந்தன. ஆனால், அக்டோபர் மாதத் தேர்வில் இத்தகைய கேள்விகள் இடம்பெறாதது தேர்ச்சி விகிதம் உயர்ந்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று டாக்டர் சமர் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், அறிவிக்கப்பட்ட விடைக்குறிப்பு வெளியிடுவதில் தெளிவின்மை, தொலைதூரத் தேர்வு மையங்கள், தாமதமாக வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டுகள் ஆகியவை தேர்வர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்வுக் கட்டணம் குறைக்கப்பட்டதை வரவேற்ற அவர், NBEMS தனது அறிவிப்புகள் தொடர்பாகத் தெளிவான விளக்கங்களை அளிப்பதுடன், தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நவம்பர் 20 முதல் மதிப்பெண் பட்டியல்!

தேர்ச்சி பெற்றவர்கள் FMGE தேர்ச்சி சான்றிதழைப் பெறுவதற்கு நேரில் ஆஜராகி, தங்களது அடையாளம் மற்றும் கல்விச் சான்றிதழ்களைச் சரிபார்க்க வேண்டும். 30 தேர்வர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதற்கான காரணங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக NBEMS கூறியுள்ளது. தனிப்பட்ட மதிப்பெண் பட்டியல்களை நவம்பர் 20-ம் தேதி முதல் ஆறு மாதங்களுக்கு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆனால், இந்த மதிப்பெண் பட்டியலை மாநில மருத்துவக் கவுன்சில்களில் பதிவு செய்வதற்கான தேர்ச்சி சான்றிதழுக்கு மாற்றாகப் பயன்படுத்த முடியாது என்றும் NBEMS தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், அனைத்து வினாக்களும் பாடத்துறை நிபுணர்களால் மறுஆய்வு செய்யப்பட்டதாகவும், தொழில்நுட்ப ரீதியாகத் தவறான கேள்விகளுக்கும், ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்று விடைகளுக்கும் உரிய மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் தற்காலிகமானவை என்றும், தேர்வர் தகுதியற்றவர் என்பது பின்னர் கண்டறியப்பட்டால், முடிவு வெளியான பிறகோ அல்லது தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகோ அவரது தேர்வு முடிவு மற்றும் தகுதி ரத்து செய்யப்படலாம் என்றும் NBEMS எச்சரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.