நடிகை வித்யா பாலன் பெயரில் சமூகவலைதளத்தில் போலி கணக்கு – சினிமாவில் வாய்ப்பு எனக் கூறி பண மோசடி!

நடிகை வித்யா பாலன் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்கு தொடங்கப்பட்டு பண மோசடி நடைபெற்ற சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர் வித்யா பாலன்.  இவர் இயக்குநர் மணிரத்னத்தின்…

நடிகை வித்யா பாலன் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்கு தொடங்கப்பட்டு பண மோசடி நடைபெற்ற சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர் வித்யா பாலன்.  இவர் இயக்குநர் மணிரத்னத்தின் ‘குரு’,  இயக்குநர் பால்கியின் ‘பா’ உள்ளிட்ட படங்களில் நடித்து பாலிவுட்டின் பிரபல நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவர்.  இவர் 2012 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை நிகழ்வுகளைத் தழுவி எடுக்கப்பட்ட ‘த டர்ட்டி பிச்சர்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்து,  தேசிய விருது வென்றார் நடிகை வித்யா பாலன்.  நன்கு தமிழ் பேசக்கூடிய நடிகையான வித்யா பாலன்,  தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமார் ஜோடியாக ‘நேர்க்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

திருமணத்துக்குப் பின்னும் தொடர்ந்து ஹீரோயின் சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் வித்யா பாலன் நடிப்பில் இந்த ஆண்டு தோ அவுர் தோ ப்யார் எனும் திரைப்படம் வெளியாக உள்ளது.  இந்த நிலையில், வித்யா பாலன் பெயரில் போலி சமூக வலைதளக் கணக்குகள் தொடங்கப்பட்டு பண மோசடி நடைபெற்ற சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வித்யா பாலன் பெயரில்  போலி மின்னஞ்சல்,  இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கி,  அதன் மூலம், சினிமா துறையைச் சேர்ந்த நபர்களை அணுகி, சினிமாவில் வாய்ப்புகள் வழங்குவதாகக் கூறி மோசடி நபர் பணம் பறித்துள்ளார்.

வித்யா பாலனுக்கு நெருங்கிய வட்டாரத்தினரிடம் இது போன்று மோசடியில் ஈடுபட அடையாளம் தெரியாத நபர் முயன்றுள்ள நிலையில்,  இதுகுறித்து தெரிய வந்த வித்யா, தற்போது மும்பை,  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இந்நிலையில் அவரது புகாரின் அடிப்படையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ், அடையாளம் தெரியாத மோசடி நபர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.