தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி நியாய விலைக் கடைகளில் பொருள்கள் தரமாக
வழங்க வேண்டும் என்று உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர்
சக்கரபாணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை
சார்பில் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:
விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் அரிசி முறையாக பெற்று அதனை உடனடியாக அரவை ஆலைகளும் அனுப்பி அரைத்து பொதுமக்களுக்கு தரமான அரிசியை நியாய விலை கடைகள் மூலம் விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை உள்ளிட அனைத்து பொருள்களையும் தரமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்கிற அடிப்படையில் தமிழக அரசு செயலாற்றி வருகிறது. தமிழகத்தில் ஆட்சி அமைத்து 14 மாதங்களில் சுமார் 13 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய நியாய விலைக் கடைகள் கட்டும்போது அங்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறை வசதியுடன் கட்டப்படுகிறது. இந்த நடவடிக்கையை மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் பாராட்டு
தெரிவித்தார். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை அனைத்து மாநில உணவு பொருள்கள் வழங்கல் துறையும் பின்பற்ற அவர் அறிவுறுத்தினார்.
சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, நமக்கு நாமே திட்டம், ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், தனியார் தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி ஆகிய நிதிகளில் புதியதாக நியாய விலைக் கடைகள் கட்டப்பட்டு வருகிறது.
உணவுப் பொருள்கள் கடத்தல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது. தமிழகத்தில் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை, காவல் துறை
இரண்டு மண்டலங்களாக இருந்து வந்தது. தற்போது திருச்சி மற்றும் கோவை ஆகிய
இரண்டு இடங்களில் புதியதாக மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லையோர மாவட்டங்களில் அரிசி கடத்தலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நெல்லுக்கு ஆதார விலையாக குவிண்டாலுக்கு மத்திய அரசு ரூ.100 உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் விவசாயிகள் கோரிக்கை விடுக்காமலேயே பிரதமருக்கு தமிழக முதல்வர் நெல்லுக்கு கூடுதல் விலை வழங்க கோரி கடிதம் எழுதினார்.
இதைத்தொடர்ந்து வருகிற செப்ட்டம்பர் 1-ஆம் தேதி முதல் குவிண்டால் நெல்லுக்கு
ரூ.2007 விலையில் கொள்முதல் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்
கடந்த காலத்தில் 103 இடங்களில் திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்குகள்
செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் நெல் மூட்டைகளை பாதுகாக்க 10 நாள்களுக்கு முன்பு மூன்று லட்சம் டன் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க சேமிப்பு கிடங்குகள் கட்டுவதற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
மேலும் கூடுதல் சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கு தற்போது ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நாள்தோறும் 500 டன் அரிசி அரவை மேற்கொள்ள 10 இடங்களில் தனியார் பங்களிப்புடன் ஆலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோல கூடுதலாக அரிசி அரவை மேற்கொள்ள ஆலைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 முன்மாதிரி நியாய விலைக் கடைகள் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மேலும் நிகழ்ச்சியில் 212 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 60 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.








