நடிகர் ரஜினிகாந்த் சுதந்திர தினத்தை முன்னிட்டு டிவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுக்கோள் விடுத்திருந்தார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் தேசிய கொடியை ஏற்றுவதோடு தங்களது சமூக வலைதள முகப்பு படங்களில் மூவர்ணக் கொடியை வைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “இந்த ஆண்டு நம் நாடு சுதந்திரம் பெற்ற 75 வது ஆண்டு. நம் இந்திய நாடு சுதந்திரம் அடைய எத்தனையோ ஆண்டுகள் பல லட்சம் சுதந்திர போராட்ட வீரர்கள், எத்தனையோ சித்த்ரவதை, கொடுமைகளை அனுபவித்து இருக்கிறார்கள். எத்தனையோ பேர் அவர்களின் உயிரையே தியாகம் செய்து இருக்கிறார்கள்.
நம் நாட்டை வணங்கும் விதமாக, நம் எல்லோருடைய ஒற்றுமையை காட்டும் விதமாக, அந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வருகிற 15 ஆம் தேதி ஜாதி, மத, கட்சி வேறுபாடின்றி நம் எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு நம் வருங்கால சந்ததியினர் கையில் தேசிய கொடியை கொடுத்து, நமது வீடுகளில் தேசிய கொடி பறக்க விட்டு பெருமை கொள்வோம்.
நாடு இல்லை என்றால் நாமும் இல்லை. நாம் எல்லாரும் இந்தியர்கள் என்று பெருமை கொள்வோம் ஜெய்ஹிந்த்” என்று பேசியுள்ளார்.




