“நெல்லுக்கான ஆதார விலை ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் கடிதம் மூலம்
பிரதமரிடம் ஒப்புதல் பெற்றுள்ளார்” என உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் பொது வினியோக திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர்
சக்கரபாணி கூறியதாவது:
திமுக ஆட்சி பொறுப்பேற்று 14 மாதங்களில் தமிழகத்தில் 12 லட்சத்து 88
ஆயிரத்து 953 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகள் சொந்தக் கட்டிடத்தில் இயங்க
வேண்டும் என்பது எங்கள் கொள்கை. இதில் 50 கடைகள் மட்டும் வாடகை கட்டிடத்தில்
இயங்கி வருகிறது அதற்கும் சொந்த கட்டிடம் கட்டுவதற்கு உண்டான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
தொடர்ந்து தமிழக முதல்வர் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு
மாவட்டங்களிலும் 75 நியாய விலைக் கடைகள் முன்மாதிரியாக இருக்கும் வகையில் ஒரு ஒரு கட்டிடங்களும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேம்படுத்த
உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி முழுநேர கடைக்கு 10 லட்சமும் பகுதிநேர கடைக்கு 7 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்து கடைக்கான வடிவமைப்பையும் முதல்வர் வழங்கியுள்ளார்.
தொடர்ந்து பேசியவர் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை
உள்ளிட்ட மாவட்டங்கள் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் இந்தப் பகுதிகளில்
அரிசி கடத்தலை கட்டுப்படுத்துவதில் கடந்த ஆட்சியை காட்டிலும் தற்போது
இருமடங்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் இரண்டு ஆண்டுகளில் அரிசி கடத்தல் தொடர்பாக 280 பேர் கைது செய்யப்பட்டார்கள். தற்போது திமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 295 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் கடந்த ஆட்சியில் அக்டோபர் 1ஆம் தேதி தான் நெல் கொள்முதல் செய்யப்படும். மேலும் மேட்டூர் அணையானது ஜூன் மாதத்தில் திறக்கப்படும். ஆனால் கர்நாடகாவில் பெய்த மழையால் விவசாயிகள் கோரிக்கை வைக்கும் முன்னரே செப்டம்பர் 24-ஆம் தேதியே அணை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் கடிதம் மூலம் ஒப்புதல் பெற்று அக்டோபர் 1ஆம் தேதி நெல் கொள்முதல் என்பதை செப்டம்பர் 1 ஆம்
தேதி கொள்முதல் செய்யும் வகையில் ஒப்புதல் பெற்றுள்ளார்.
அதேபோல் நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு ஒரு ரூபாய் உயர்த்தி
வழங்கியுள்ளது. அதன்படி ஒரு கிலோ நெல் 20 ரூபாய் 60 பைசாவிற்கு கொள்முதல்
செய்யப்பட்ட நிலையில் தற்போது 21 ரூபாய் 60 காசுக்கு கொள்முதல் செய்யப்படும்.
குவிண்டாலுக்கு 2,160 ரூபாய் கொள்முதல் செய்யப்படும்.

கடந்த ஆட்சியில் நெல்லை பாதுகாக்க குடோன் இல்லாமல் நனைந்து வருகிறது என
பல்வேறு அமைப்புகள் அறிக்கை விட்டு வருகின்றன. இந்த நிலையில் முதல்வர் துறை
சார்ந்து ஆய்வுக் கூட்டம் நடத்தி முதற்கட்டமாக மூன்று லட்சம் மெட்ரிக் டன்
திறந்த வெளியில் உள்ள நெல்களுக்கு சேமிப்பு குடோன் கட்டுவதற்காக சுமார் 250
கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அந்த பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தை விட தற்போதைய ஆட்சியில் குறுவை சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கடந்த ஆட்சியை விட திமுக ஆட்சியில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் என்றார் சக்கரபாணி.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர காந்தி
மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.







