தோல்வியும் ஒரு கற்றல் அனுபவமே என தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் சாரம்சங்கள் குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தி.
டி20 தொடரில் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பின், ஆஸ்திரேலிய மண்ணில் உலக கோப்பைக்கான வேட்டைக்கு புறப்பட்டது இந்திய அணி. அதே சமயம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் ஷிகர் தவான் தலைமையிலான மற்றொரு இந்திய அணி. முதல் ஒருநாள் போட்டியில் லக்னோவில் களம் கண்டது தவன் தலைமையிலான இந்திய அணி. மழை காரணமாக தாமதமாக தொடங்கப்பட்ட போட்டி, DLS முறைப்படி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்ததை அடுத்து, தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட் செய்தது.
தொடக்கம் முதலே கட்டுப்பாடான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்ரிக்கா அணியின் விக்கெட்டுகளை முதல் 10 ஓவர்களில் கைப்பற்ற தவறியது இந்தியா. தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க ஆட்டக்காரர்களான மலன் மற்றும் டி காக், தேவையான நேரத்தில் ஆட்டத்தின் கியரை மாற்ற முயன்ற போது, முதல் ப்ரேக் த்ரூ கொடுத்தார் ஷர்துல் தாகூர்.
13 ஆவது ஓவரின் தொடக்கத்தில் மலன் விக்கெட்டை இழந்த தென் ஆப்பிரிக்கா அணி, அடுத்தடுத்து 16 வது ஓவருக்குள் பவுமா மற்றும் மார்க்ரம் உள்ளிட்டோர் விக்கெட்டுகளை சொற்ப ரன்களுக்கு பறிகொடுத்தது. அதன் பின் டி காக் உடன் கூட்டு சேர்ந்த ஹென்றி கிளாசன் புது பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முயன்ற போது, 23 வது ஓவரில் டி காக்கை எல்பிடபிள்யூ ஆக்கினார் இளம் சுழற்பந்து நாயகன் பிஷ்னாய்.
அதன் பின் ஜோடி சேர்ந்த மில்லர் மற்றும் கிளாசன் கூட்டணி, அதிரடியாக ஆடி 4 வது விக்கெட்டுக்கு 139 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்கா அணியின் ஸ்கோரை 249 ரன்களுக்கு உயர்த்தினர். 40 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகள் இழந்து 249 ரன்கள் குவித்து இருந்தது.
இந்திய அணி சார்பில் ஷர்துல் தாகுர் 2 விக்கெட்டுகளும், ரவி பிஷனாய் மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் விக்கெட்டுகளை பறிகொடுத்து குழப்பத்தை ஏற்படுத்தியது. அதன்பின் 3 வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட் நிதானமான ஆட்டத்தை விளையாட முயற்சிக்கும் போது, சம்ஷி பந்தில் ஸ்டம்பிங் ஆக, அவருடன் இஷான் கிஷனும் நடையை கட்டினார்.
அதன் பின் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் உடன் கை கோர்த்து, வலுவான நிலையில் விளையாடி கொண்டிருந்த போது அரைசதம் கண்ட ஸ்ரேயாஸ் ஐயர் லுங்கி இங்கிடி பந்தில் அவுட் ஆனார். இருப்பினும் ஷர்துல் தாக்கூர் உடன் பார்ட்னர்ஷிப் சேர்ந்து விளையாடிய சஞ்சு சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த வேளையில் அதிரடி ஆட்டதிற்கான முயற்சியில் ஈடுபட்டது ஓரளவு ரசிகர்கள் மத்தியில் திருப்தியை கொடுத்தது.
சரிவில் இருந்த இந்திய அணியை மீட்டெடுத்த சஞ்சு மற்றும் ஷார்துள் ஜோடி வெற்றிக்கான கட்டத்தை எட்டிய சூழலில் ஷர்துல் தாகூர் 33 ரன்களில் அவுட் ஆக, குறைந்த ஓவர் மட்டுமே இருந்த நிலையில், லோயர் ஆர்டர் பேட்டிங் அடுத்தடுத்து சரிவை கண்டது. இறுதி வரை முயற்சித்த சஞ்சு சாம்சன் கடைசி ஓவரில் போராடியும், இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணியிடம் தோல்வியுற்றது. சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன், 63 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 86 ரன்கள் அடித்தார்.
40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்து, 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. தென் ஆப்ரிக்கா அணியின் ஹென்றி கிளாசன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். போட்டியின் முடிவை அடுத்து தோல்விக்கான காரணங்கள் குறித்து சிந்திக்கும் பொழுது, இந்திய அணியின் முக்கிய வீரர்கள் பற்றாக்குறை அணிக்கு பக்கபலமாக இல்லாவிட்டாலும், இளம் பட்டாளத்திற்கான வாய்ப்பாகவே இது பாராட்டப்படுகிறது.
அதே நேரத்தில் அனுபவம் குறித்து பேசுகையில், ஷர்துல் தாகூர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் நல்ல கம் பேக் கொடுக்க, சஞ்சு சாம்சன் கடந்த நியூசிலாந்து A அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வைத்திருந்த அதே பார்ம்மை இங்கு வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக மொத்தம் முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அவ்வளவு மோசமான தோல்வியை பெறவில்லை என்றாலும், அடுத்த இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய அணியின் கேப்டன் ஷிகர் தவன், “அணியினர் விளையாடிய விதம் மிகவும் பெருமையாக இருந்தது. எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை என்றாலும் ஷ்ரேயாஸ், சாம்சன் மற்றும் ஷர்துல் பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது. பிட்சில் ஸ்விங் மற்றும் ஸ்பின் விக்கெட்டில் நாங்கள் அதிக ரன்கள் கொடுத்தோம். பீல்டிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால் இது எங்களுக்கு ஒரு நல்ல கற்றல் அனுபவமாக இருந்தது” என பேசினார்.
எனவே இந்திய அணியின் வழக்கமான இன் பார்ம் குழுவினரை தவிர்த்து, புது அணிக்கான உத்வேகத்தை இந்த தோல்வி ஈடுகட்டி, அடுத்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து யோசிக்க செய்யும் என்பதே அவரது கருத்தாக இங்கு பதிவு செய்கிறார்.
-நாகராஜன்.









