நான் ஆணாக இருந்திருக்க விரும்புகிறேன், அப்படி இருந்திருந்தால் இந்த தோல்வி நடந்து இருக்காது என டென்னிஸ் வீராங்கனை ஜெங் கின்வென் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சீனாவை சேர்ந்த 19 வயதான ஜெங் உலக தரவரிசையில் 74-வது இடத்தில் இருக்கும் டென்னிஸ் வீராங்கனை ஆவார். இவர் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வீடெக்கிற்கு எதிராக மோதினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதல் ஆட்டத்தில் 6-7 என்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கின்வென் இரண்டாம் சுற்று தொடங்குவதற்கு முன் அவருக்கு மாதவிடாய் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் சில நிமிடங்கள் மருத்துவ ஓய்வு எடுத்துக் கொண்டு பின்னர் காயம்பட்ட வலது காலுக்கு ஸ்ட்ராப் அணிந்து மீண்டும் ஆட்டத்தை தொடங்கினார். வலியுடன் விளையாடிய அவர் தோல்வி அடைந்து வெளியேறினார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெங் கின்வென், காலில் ஏற்பட்ட காயம் பலமானது. ஆனால் வயிற்று வலியோடு ஒப்பிடும்போது பரவாயில்லை எனவும், வயிற்று வலி மிக வேதனையாக இருந்தது. இது அனைத்து பெண்களுக்கும் நிகழும் விஷயம், மாதவிடாயின் முதல் நாள் வலி மிக அதிகமாக இருக்கும். நான் ஆணாக இருந்திருந்தால் இந்த வலி ஏற்பட்டு இருக்காது. நான் ஆணாக இருக்கவே விரும்புகிறேன் என உருக்கமாக தெரிவித்தார். மேலும் இந்த வலி இல்லையெனில் நான் இன்னும் சிறப்பாக விளையாடிருப்பேன், நிச்சயம் இன்னொரு போட்டியில் இகாவை தோற்கடிப்பேன் எனவும் தெரிவித்தார்.