முக்கியச் செய்திகள் இந்தியா

கருப்பு பூஞ்சை நோய்க்கு கண்களை இழந்த சிறுவர்கள்!

மும்பையில் கருப்பு பூஞ்சை தொற்றால் சிறுவர்கள் மூவர் தங்கள் கண்களை இழந்துள்ள சம்பவம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், கருப்பு பூஞ்சை தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இத்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது மூன்று சிறுவர்கள் தங்கள் கண்களை இழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இணை நோய் உள்ளவர்கள், நோயெதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்கள் ஆகியோர்களை கருப்பு பூஞ்சை தொற்று சமீபமாக அதிக அளவில் தாக்கி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், இந்த பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்கள் தங்கள் கண்களை இழந்துள்ளனர். இவர்கள் மூவரும் கொரோனா தொற்றிலிருந்து சமீபத்தில் குணமடைந்திருந்தனர். 4,6,14 வயதுடைய குழந்தைகள் மூவருக்கும் கருப்பு பூஞ்சைக்கு எதிராக சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

“14 வயது சிறுமிக்கு கருப்பு பூஞ்சை கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அச்சிறுமிக்கு நீரிழிவு பிரச்னையும் இருந்துள்ளது. சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் அவளது ஒரு கண் முழுமையாக கருப்பு நிறத்தில் மாறியது.

தொடர்ந்து மூக்கிலும் பூஞ்சை தொற்று பரவியது. நல்வாய்ப்பாக மூளைக்கு பூஞ்சை பரவில்லை. நாங்கள் அச்சிறுமிக்கு ஆறு வாரம் சிகிச்சையளித்தோம் ஆனால், அவளது கண்களை எங்களால் காப்பாற்ற முடியவில்லை.” என சிறுமிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே போல மற்றொரு 16 வயது சிறுமி கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இச்சிறுமிக்கு திடீரென நீரிழிவு நோய் ஏற்பட்டு குடலிலிருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் கருப்பு பூஞ்சை தொற்றுதான் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றுக்கு 8,26,740 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,81,903 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

நுகர்வு அதிகரிப்பு: முட்டை விலை திடீர் உயர்வு

Halley karthi

இந்தியா-இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் 18ம் தேதி தொடங்கும்: பிசிசிஐ அறிவிப்பு

Vandhana

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு