திருக்கழுக்குன்றம் அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு நிலவியது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் ஆடுகளை மேய்ப்பதற்காக வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது வானத்தில் இருந்து அதிக சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று அந்தப்பகுதியில் விழுந்துள்ளது. அந்த பொருளானது சுமார் 10 கிலோ எடையுடனும் காணப்பட்டது. மேலும் விழுந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் அது வெடிபொருளாக இருக்கலாம் என கருதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, மர்ம பொருளை பார்வையிட்ட விஏஓ, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மர்ம பொருளை ஆய்வுக்கு உட்படுத்த காவல்நிலையம் எடுத்து சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





