ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.  தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு…

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28-ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. அதன் பின் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியதால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

 

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத ஒன்பது மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கொரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி தேர்தலை நடத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். டிசம்பர் மாத இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.