வாழ்வாதாரம் இல்லாதவர்கள் ஆக்கிரமிப்பு இடத்தில் குடியிருந்தால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை வில்லிவாக்கம் தேவி பாலியம்மன் கோயில், தாமோதர பெருமாள் கோயில் மற்றும் அகத்தீஸ்வரர் கோயில் ஆகிவற்றை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரின் ஆலோசனைப்படி கோயில்களில் குடமுழுக்குப் பணிகளில் ஈடுபடுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கோயிலுக்கு சொந்தமான இடங்களில் வாடகை வசூலிப்பது மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் சேகர் பாபு உறுதி தெரிவித்தார். வணிக ரீதியாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார். கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.







