டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டியில் தோல்வியுற்று இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.
ஜப்பானின் டோக்கியோவில் 2020ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெற்றுவருகிறது. இதில் இந்தியா சார்பில் பளுத்தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு மட்டுமே வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதனால் இந்தியா ஒரு வெள்ளிப் பதக்கதுடன் மட்டுமே முதல் நாள் முதல் இன்று வரை உள்ளது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு ரியோவில் நடைப்பெற்ற ஒலிம்பிக்கில் இறுதிசுற்று வரை சென்று வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்த இந்தியாவின் பி.வி.சிந்து இந்தமுறை நடைபெறும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என இந்தியா முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்போடு உள்ளனர்.
ஆனால் இன்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் உலக தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள தைவான் நாட்டு வீராங்கனையான தாய் து யிங்குடன் உலக தரவரிசைப்பட்டியலில் 7ம் இடத்தில் உள்ள பி.வி. சிந்து மோதினார். இந்த போட்டியின் முதல் செட்டில் தைவான் வீராங்கனை முதலில் இருந்தே ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தினார். அவருக்கு ஈடுகொடுத்து விளையாடிய பி.வி. சிந்து எவ்வளவு போராடியும் முதல் செட்டை கைப்பற்ற முடியாமல் போனார். இதனால் தைவான் வீராங்கனை 21-18 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டை கண்டிப்பாக கைப்பற்ற வேண்டும் என்ற அழுத்தத்தில் ஆட்டத்தை தொடங்கிய பிவி சிந்துவிற்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தனது நேர்த்தியான ஆட்டத்தால் ஆக்ரோஷமான பி.வி.சிந்துவின் ஷாட்களை மிக லாவகமாக கையாண்டு அதனை பாயிண்டுகளாக மாற்றினார் தைவான் வீராங்கனை தாய் து யிங். இதனால் இரண்டாவது செட்டை 21-12 என்ற கணக்கில் அவர் எளிதில் கைப்பற்றினார். ஆனால் எவ்வளவு போராடியும் பி.வி.சிந்துவால் அதிக பாயிண்டுகளை எடுக்க முடியவில்லை. இதனால் இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார் பி.வி.சிந்து.

தாய் து யிங்குடன் இன்றையப் போட்டியுடன் சேர்த்து 19 சர்வதேசப் போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ள பிவி சிந்து 14 போட்டிகளில் தோல்வியடைந்து 5 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதல் அரையிறுதி சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்த சீன வீராங்கனை ஜி பிங் ஜியாவோவுடன் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் நாளை விளையாடவுள்ளார். ஜி பிங் ஜியாவோ உலக தரவரிசைப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளார். தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட பி.வி.சிந்து நாளை வெண்கலப் பதக்கத்தை வெல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.









