முக்கியச் செய்திகள் தமிழகம்

EWS 10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல – வைகோ

முன்னேறிய சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இவ்வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்திர பட், பீலா திரிவேதி, ஜே.பி.பர்திவாலா அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சமூகத்தினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து கடந்த 2019ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது.

சமூகநீதி கோட்பாட்டையே தகர்க்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றிய இச்சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. ஏற்கனவே உச்சநீதிமன்றம் மொத்த இடஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு மேல் இருக்கக் கூடாது என்று வரையறுத்துள்ளது. ஆனால் பாஜக அரசு, அரசியல் சாசனத்தின் சமூகநீதிக் கோட்பாட்டிற்கு எதிராக இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைத் திணித்தது சமூக நீதியையே நீர்த்துப் போகச் செய்கிற நடவடிக்கையாகும்.

உயர்சாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த முக்கியமான வழக்கில்தான் இன்று உச்சநீதிமன்றம் உயர்சாதி ஏழைகளுக்கு அளிக்கப்படும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த அமர்வில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவேதி, ஜெ.பி.பார்திவாலா ஆகியோர் 10 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்றும், தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திரபட் ஆகிய இருவரும் செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

மண்டல் குழு வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்தது. அதை முறியடிப்பதற்குத்தான் ஒன்றிய பாஜக அரசு, அரசமைப்புச் சட்டத்தில் 103ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து, உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்தது.

ஒட்டுமொத்தமாக சமூகநீதி தத்துவத்தையே கேலிக்குள்ளாக்கும் வகையில், பாஜக அரசு நிறைவேற்றிய 103 ஆவது சட்டத் திருத்தம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானத்தை(Basic Structure) தகர்த்திருக்கிறது. இதனை உச்சநீதிமன்றம் பெரும்பான்மை தீர்ப்பு அடிப்படையில் செல்லும் என்று கூறி இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. சமூகநீதிப் போராட்டத்தில் நீண்ட நெடிய களங்களை சந்திக்க வேண்டிய நிலைமையை இத்தீர்ப்பு உணர்த்துகிறது. சமூக நீதிக்காகப் போராடும் ஜனநாயக சக்திகள் ஒன்றுசேர்ந்து, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பூசி 95 சதவீத பாதுகாப்பை தருகிறது: தமிழ்நாட்டில் நடந்த ஆய்வில் உறுதி

EZHILARASAN D

சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் காலமானார்!

ரோஹித் சர்மாவுக்கு கொரோனா: இந்திய அணியில் இணையும் மயங்க் அகர்வால்!

Web Editor