பேரறிவாளன் விடுதலையில் உயர்நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கின்றதோ அதில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லையென்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் கொங்கு மண்டலத்திற்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகை தரும் ராகுல்காந்தி ஈரோடு மாவட்டம் பெருந்துறை, பன்னீர்செல்வம் பூங்கா, அறச்சலூர் அருகேயுள்ள ஓடாநிலை ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும், பேரறிவாளன் விடுதலையில் உயர்நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கின்றதோ அதில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபனை இல்லையென்றும்,தேர்தல் காலத்தில் ஒவ்வொரு கட்சியும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு தாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் தங்கள் தலைவர்தான் முதல்வராவார் என்று பேசுவது வாடிக்கையானதுதான் என்றார்.
மேலும் இல. கணேசன் பாவம் ஓய்வெடுக்க வேண்டிய வயது ஏதாவது சொல்லி அவரது மனதை புண்படுத்திட விரும்பவில்லை அவர் நன்றாக ஓய்வெடுக்கட்டும் என்றும், மோடியின் மீது மக்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் அது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலித்தது சட்டமன்றத் தேர்தலிலும் மோடியின் மீது மக்கள் அதிக மன அதிருப்தியுடன் இருக்கிறார்கள் மோடியின் காலத்தில் பொருளாதாரம் என்பது வளரவே கிடையாது என்றும், விவசாயிகளின் குறைகளைத் தீர்க்க முன்வராததால் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருவதாகவும், வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் ஜி.எஸ்.டி வரியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் எது வளர்ந்திருக்கிறது என்று சொன்னால் மோடியின் தாடிதான் வளர்ந்திருக்கிறதே ஒழிய வேறு எதுவும் வளரவே இல்லையென்றும், சசிகலாவினால் அரசியலில் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை சொல்ல விரும்பவில்லை அவர் நல்லபடியாக குணமடைந்து திரும்பி வரவேண்டுமென்று தெரிவித்தார்.







