அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட்டால் தமிழக மக்களே வரவேற்பார்கள் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த ஆலந்தூரில் சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. கட்சி சார்பில்
சக்தி கேந்திர கூட்டம் நடந்தது. பா.ஜ.க. மாவட்ட தலைவர் சாய் சத்யன் தலைமை
தாங்கினார். இதில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறை இணை மந்திரி
ராவ் இந்திரஜித் சிங், தமிழக பா.ஜ.க. துணை தலைவர் கரு.நாகராஜன் ஆகியோர் கலந்து
கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் கரு. நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
9ந் தேதி மண்டல அளவில் ஆய்வு கூட்டம் நடக்கிறது. 13ந் தேதி அமெரிக்காவில் இருந்து சென்னை வரும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதிமுகவை விட மக்களுக்கு தேவையான போராட்டங்களில் பா.ஜ.க. ஈடுப்படுகிறது. எடப்பாடியோ அதிமுகவோ எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என சொல்ல முடியாது.
ஆனால் அவர்களை விட அதிகமாக ஈடுபடுகிறது. தமிழக மக்களுக்கு குரல் கொடுக்கும் பேரியக்கமாக மின் கட்டணம், சொத்து வரி உயர்வு, மேகதாது அணை கட்ட கூடாது, முல்லை-பெரியாறு விவகாரத்தில் உரிமை விட்டு கொடுக்கக் கூடாது. தமிழகத்தில் நடக்கும் லாக்-அப் மரணம் ஆகியவற்றை கண்டித்து போராட்டம், நடக்கிற ஊழல், நடக்க உள்ள ஊழல் முன் கூட்டியே மக்களிடம் சொல்லும் போராட்டம் என பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது. 
பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டாலும் பா.ஜ.க.வும் மக்களுக்கு குரல் கொடுப்பதில் இணையாக பணியாற்றுகிறது. திராவிட மாடல் என சொல்லி தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுகின்ற திமுகவை தோற்கடிக்க அனைத்து சக்திகளும் ஒன்று இணைய வேண்டும். அதிமுகவில் ஏற்பட்டு உள்ள பிரச்சனை, குழப்பம் முழுக்க முழுக்க உட்கட்சி பிரச்சனை. அந்த பிரச்னையில் கருத்து சொல்ல முடியாது. ஆனால் அனைவரும் இணைந்து செயல்பட்டால் தமிழக மக்களே வரவேற்பார்கள் என்பது உறுதி.
ஆனால் அவர்களுக்குள் உள்ள மனநிலை நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக எதிர்பார்த்து இருக்கும் நிலையில் பா.ஜ.க. எந்த கருத்தும் கூற முடியாது. திருமாவளவனுக்கு வேறு வேலை கிடையாது. தூங்கி முழித்ததும் எத்தனை முறை பா.ஜ.க. திட்டுவது என குறித்து வைத்து வருகிறார்.
பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னம் பெரிய தவறு செய்துவிட்டது போல் வெற்றிமாறன் பேசி உள்ளார். வெற்றிமாறனை தமிழக மக்களே கண்டித்து வருகின்றனர். தமிழ் படங்களை எடுப்பதை விட்டு திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு வக்காலத்து வாங்குவது ஏன்? வரலாற்றை தெரிந்து பேச வேண்டும். கடந்த காலத்திற்கு ஏன் செல்ல வேண்டும். மக்களை குழப்புகின்றனர். மணிரத்னம் நல்ல படம் தந்து உள்ளதை பாராட்ட வேண்டும். சினிமாவில் குறை சொல்வது இயல்பு இவ்வாறு அவர் நாகராஜன் தெரிவித்தார்.







