இஸ்லாமியர்களின் புனித தலமாக கருதப்படும் சவூதி அரேபியாவில் உள்ள மதீனாவை சுற்றிப் பார்க்க விரும்புவோருக்காக சவூதி அரசு 3D வடிவிலான மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது.
இஸ்லாமியர்கள் புனித பயணமாக மக்கா மற்றும் மதீனாவுக்கு செல்வது வழக்கம். இது இஸ்லாத்தில் முக்கிய இறை வழிபாடாகவும் மற்றும் 5 முக்கிய கடமைகளில் ஒன்றாகவும் உள்ளது. இஸ்லாம் மார்க்கத்தில்மூன்று இடங்கள் புனித இடங்களாக கருதப்படுகிறது.
1. சவூதி அரேபியாவில் உள்ள ”மஸ்ஜிதுல் ஹரம்” என அழைக்கப்படும் மக்கா
2. சவூதி அரேபியாவில் உள்ள “மஸ்ஜிதுன் நபவி” என அழைக்கப்படும் மதீனா
3. ஃபலஸ்தீனத்தில் உள்ள “மஸ்திதுல் அக்ஸா” என அழைக்கப்படும் பள்ளிவாசல்
இந்த மூன்று புனித இடங்களில் எந்த இடத்திற்கு சென்றாலும் மற்ற வணக்கத் தலங்களை விட நன்மைகள் அதிகம் என்பது இஸ்லாத்தில் உள்ள நம்பிக்கையாகும்.
இஸ்லாத்தில் மிக முக்கிய ஐந்து கடமைகளில் ஒன்றாக கருதப்படுவது ஹஜ் எனும் புனித யாத்திரையாகும். ஓரளவு பொருளாதார வசதியும் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கான உடல் வலிமையும் இருந்தால் ஹஜ் செய்வது முஸ்லிம்களின் மீது கடமையாகும். புனித யாத்திரை மேற்கொள்வோர் சவூதி அரேபியாவுக்கு செல்லும் போது மக்காவின் எல்லை பகுதியில் “இஹ்ராம்” எனும் வெண்ணிற ஆடையை அணிந்து கொண்டு மக்காவில் நுழைய வேண்டும்.
மக்காவில் இறைவழிபாட்டினை முடித்துவிட்டு இஸ்லாமியர்களின் இறைத் தூதரான நபிகள் நாயகம் வாழ்ந்து மறைந்த புனித மதீனா நகருக்கு பயணம் மேற்கொண்டு அங்கே இறை வழிபாடுகளை நடத்துவார்கள். புனித பயணத்தில் இரண்டு விதமான பயணங்கள் உண்டு. ஒன்று “ஹஜ்” யாத்திரை மற்றொன்று “உம்ரா” எனப்படும் பயணமாகும்.
ஹஜ் என்பது இஸ்லாமிய மாதத்தின் 12வது மாதமான துல்ஹஜ் மாதத்தில் இறைத் தூதர் இப்ராஹிம் நினைவாக இந்த புனித பயணம் இஸ்லாமியர்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. துல்ஹஜ் மாதத்தை தவிர்த்து பிற மாதங்களில் மக்காவுக்கு செல்லும் பயணம் உம்ரா எனப்படும்.
இதனையும் படியுங்கள்: ரமலான் நோன்பும் இந்திய பாரம்பரிய உணவுகளும் – ஓர் பார்வை
மக்காவுக்கு புனித யாத்திரை செல்ல வேண்டும் என்கிற கனவுடன் பல ஏழைகள் பொருளாதார வசதியின்றி கவலையுடன் காத்திருக்கின்றனர். இதற்காக இந்திய அரசு ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கி குறைந்த செலவில் ஹஜ் பயணம் மேற்கொள்வதவற்கான திட்டத்தை ஏற்கனவே அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
மக்காவும், மதீனாவும் எப்படி இருக்கும்..? என பலர் ஆவலோடு பயணம் மேற்கொண்டவர்களிடம் கேட்டறிவது வழக்கம். அசாத்தியமான தொழில்நுட்ப புரட்சி அடைந்துள்ள நவீன உலகில் வீட்டிலிருந்தபடியே மக்காவை சுற்றி பார்க்கும் 3D Virtual Reality தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட மென்பொருளை சவூதி அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் அதைவிட நேர்த்தியான தொழில்நுட்பத்துடன் 3D முறையில் மதீனாவை சுற்றிப் பார்க்கும் மென்பொருளை சவூதி அரசு அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 3 நாட்கள் வரை சுற்றிப் பார்க்கும் வகையில் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மதீனாவின் முக்கியமான கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்கள், வாயில்கள், நபிகள் நாயகத்தின் அடக்க தலம், கேலரி, மியூசியம், நூலகம் என அனைத்தும் இந்த 3D முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
https://vr.qurancomplex.gov.sa/msq/
மேல் உள்ள லின்கை கிளிக் செய்து மதீனாவை சுற்றிப் பார்க்கும் அனுபவத்தை ஒவ்வொருவரும் பெறும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
– யாழன்







