கொசுக்களைக்கூட ஒழிக்க முடிவில்லை…. தன்னைத்தானே பெருமைபேசும் முதலமைச்சர் – ஸ்டாலின் மீது பழனிசாமி விமர்சனம்….!

கொசுக்களைக்கூட ஒழிக்க முடியாத முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னைப் பற்றித் தானே பெருமைபேசி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயளலார் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது ;

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த நான் முதலாக, மக்களின் சுகாதாரத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்படுகிறது. குறிப்பாக, அவர்களின் உடல்நிலையை கடுமையாக பாதிக்கும் கொசு, தெருநாய் போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.

மழைக் காலம், குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் சூழலில், தமிழகம் முழுவதும் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகப் பெருகி தமிழக மக்களை வாட்டி வதைக்கிறது. குறிப்பாக, அதிகரித்து வரும் கொசுத் தொல்லையால், சென்னை மக்களால் பாலை முதல் இரவு வரை வெளியே தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மழை நீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்கள், குப்பைக் கூனங்களை சரிவர பராமரிப்பு செய்யாத காரணத்தாலே கொசுக்கள் அதிகரித்துள்ளன.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது, ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தில் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தது முதல், மழைக் காலத்தில் கொசுக்களை ஒழிப்பதற்குத் தேவையான எந்த நடவடிக்கையையும் திமுக அரசு எடுக்கவில்லை. கொசுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றம், ஊடகங்கள் மற்றும் அறிக்கைகள் வாயிலாக அரசின் கவனத்தை ஈர்த்துள்ளேன். அப்படி இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கொசு மருந்து அடிக்கும் பணியாளர்களை, அந்தப் பணியை செய்யவிடாமல் திமுக அரசு, அவர்களை சுய விளம்பரப் பணிகளுக்கு பயன்படுத்துவதே கொசு அதிகரிப்புக்கு முக்கிய காரணம். இதனால் கொசுக்களுக்கு கொண்டாட்டம் என்பது போல் சென்னை முழுக்க கொசுக்கள் ராஜ்ஜியம் நடக்கிறது.
கடந்த 2 மாதங்களாக கொசு மருந்து அடிக்கும் பணிக்கு யாரும் வரவில்லை என்று சென்னை நகர மக்கள் புகார் கூறுகிறார்கள். கொசுத் தொல்லையை ஒழிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்டங்களில் புகார் செய்கின்றனர். ஆனாலும், சென்னை மாநகராட்சியும், தமிழக அரசின் சுகாதாரத் துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தமிழக மக்கள் கொசுக்களிடம் மாட்டிக்கொண்டு படாத பாடுபட்டு வருகிறார்கள். சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுக்க கொசுக்கள் அதிகரித்துள்ளன.

கொசுக்கடியின் விளைவு காரணமாக சென்னையில் டெங்கு காய்ச்சல் மக்களிடம் விறுவிறு என பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் மட்டும் சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வருகின்றன. குறிப்பாக, தேர்வு நேரத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் டெங்குக்கு அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

கடந்த 2025-26ஆம் ஆண்டில் கம்ப்ரஸர் ஸ்ப்ரே, பவர் ஸ்ப்ரே இயந்திரங்கள், கைத்தெளிப்பான்கள், மினி புகையடிக்கும் இயந்திரங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி 16.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததாக கூறப்பட்டது. ஆனால், அந்தப் பணம் எங்கே போனது என்பதுதான் கேள்வி? இதிலும் ஊழல் நடந்ததாலேயே கொசுக்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறைந்தபட்சம் கொசுக்களைக்கூட ஒழிக்க முடியாமல், தினமும் போட்டோ ஷூட் நடத்திக்கொண்டு, தன்னைத்தானே பெருமைபேசி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மக்களின் உயிரோடு விளையாடும் திமுக அரசை கண்டிப்பதோடு, உடனடியாக கொசுக்களை ஒழிக்க மருந்தடிக்கவும், கொசு ஒழிப்புப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று வீடுகளில் தண்ணீர் தேங்கி உள்ளதா என்று ஆய்வு செய்யவும், காய்ச்சல் முகாம் நடத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். மக்களின் உடல்நலத்தோடு விளையாடும் கொசுக்களை ஒழிக்க வக்கற்று நிற்கும் திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.