முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் இன்று காலை சிறையில் இருந்து வெளியே வந்தார்.
சென்னை துரைப்பாக்கதில் உள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பான பிரச்னையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது செல்வாக்கை பயன்படுத்தி சொத்தை அபகரித்து கொண்டதாக மகேஷ்குமார் என்பவர் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பான புகாரில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். மேலும், ஜெயக்குமார் ஜாமீன் கோரிய மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து வாரத்தில் 3 நாட்கள் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், திருச்சியில் இருந்து வந்த பின்பு வாரந்தோறும் திங்கட்கிழமை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி ஆணையிட்டார். இந்நிலையில், அவர் இன்று காலை சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது பேசிய அவர், “ஹிட்லரின் மறு உருவம் போல் முதலமைச்சர் செயல்படுகிறார், ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது” என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








