அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 85 லட்சம் மோசடி; பள்ளி ஆசிரியர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 85 லட்சம் மோசடி-அரசு நிதி உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.  ஈரோடு மாவட்டம் பவானி செம்மாம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீசன்.இவர் தனது 2 மகன்களையும் அரசுப்…

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 85 லட்சம் மோசடி-அரசு நிதி உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். 

ஈரோடு மாவட்டம் பவானி செம்மாம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீசன்.இவர் தனது
2 மகன்களையும் அரசுப் பணிக்கான தேர்வுகளுக்குப் பயில்வதற்காகப் பவானியில் உள்ள தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையம் ஒன்றில் சேர்த்து விட்டார்.அந்த பயிற்சி மையத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த அரசு நிதி உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர் இளங்கோவன் சிறப்பு வகுப்பு எடுக்க அவ்வப்போது வந்து சென்றுள்ளார்.இதில் ஜகதீசனுக்கும், இளங்கோவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

தனக்கு அரசு அதிகாரிகளிடம் நெருக்கம் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய ஜகதீசன் தன் இரு மகன்களுக்கும் அரசு வேலை வாங்கி தரவேண்டும் என்று ரூ.10லட்சத்தை இளங்கோவனிடம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட இளங்கோவன் அரசு வேலை வாங்கி தரவில்லை.

இதுகுறித்து ஜகதீசன் பலமுறை இளங்கோவனிடம் கேட்டும் முறையான பதில் அளிக்கவில்லை. மேலும் தொடர்ந்து கால தாமதப்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஜகதீசன், பரமக்குடி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில், கடந்த 2020ம் ஆண்டு டிச.மாதம் 31ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் வழக்கை ஈரோட்டில் விசாரிக்க ஜகதீசன், நீதிமன்றத்தில் மனு செய்தார். இம்மனு ஏற்கப்பட்டு, நீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், 3 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த இளங்கோவனை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், அவரை ஈரோடு கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.

இதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.கைதான இளங்கோவன் இதேபோல் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி 15 பேரிடம் ரூ.85 லட்சம் வரை பெற்று மோசடி செய்துள்ளதாகக் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

-வேந்தன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.