ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர்கள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ந்தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து அத்தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்துள்ள நிலையில் அக்கட்சி இந்த இடைத் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது தமிழ்நாடு அரசியலில் பெரும் கேள்விக்குறியாக எழுந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த முறை அதிமுக கூட்டணி சார்பில் களம் இறங்கிய தமாகா, இந்த முறை போட்டியிடபோவதில்லை என அறிவித்துள்ளது. கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள அதிமுகவின் விருப்பத்தை ஏற்று அங்கு அக்கட்சி போட்டியிட ஏதுவாக இந்த முடிவை தமாகா மேற்கொண்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இந்நிலையில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக கடந்த ஆண்டு ஜூலை 11ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி யாரை வேட்பாளராக அறிவிக்கப்போகிறார், வெற்றிக்காக அவர் கட்டமைக்கப்போகும் வியூகம் என்ன என்று தமிழக அரசியல் களத்தில் உற்றுநோக்கப்படுகிறது.
அதே நேரம் தற்போதும் தாம்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த இடைத் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தமது இல்லத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் குறித்து தமது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி,கருப்பண்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஈரோடு கிழக்கு தொகுதியின் அதிமுக வேட்பாளர் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரம் ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகராக விளங்கும் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர் செல்வம் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னை அசோக் நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு குறித்து பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.