தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு 4,074 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சிறப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்றார். கூட்டத்தை தொடர்ந்து 153 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து 1700 பேர் கேரளா வழியாக ஹஜ் யாத்திரை சென்றனர். இந்தாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள 4074 பேர் விண்ணப்பித்து சென்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டது.
உக்ரைன் -ரஷ்யா போரால் தமிழ்நாடு திரும்பும் மாணவர்கள் படிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவ படிப்பை தொடர்வதற்கு மத்திய அரசு இன்னும் செவிசாய்க்கவில்லை. இந்திய நாட்டில் அனைவரும் சகோதரத்துடன் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.
—வேந்தன்








