ஈரோடு இடைத்தேர்தல்; 35இடங்களில் செக்பாய்ண்ட் அமைத்து காவல்துறை சோதனை

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 35 இடங்களில் காவல்துறையினர் செக்பாய்ண்ட் அமைத்து வாகனங்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 35 இடங்களில் காவல்துறையினர் செக்பாய்ண்ட் அமைத்து வாகனங்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் பிப்ரவரி 7 என்றும், வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8 -ஆம் தேதி நடைபெறும் என்றும், பிப்ரவரி 10-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பபெற கடைசிநாள் என்றும் தெரிவித்துள்ளார். மார்ச் 02-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை ஈரோடு கிழக்கு தொகுதியில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரால் பறக்கும் படை , கண்காணிப்பு குழு , நிலை கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் வாகன சோதனை நடைபெற்று வருகின்றன.

மேலும் இந்த வாகன சோதனைகளை பலப்படுத்தும் வகையில் பரிசு பொருட்கள் மற்றும்
ரொக்க பணம் உள்ளிட்டவற்றை  ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் கொண்டு வராமல் தடுக்கும் வகையிலும் மாவட்ட காவல் துறையில் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட்ட 35 இடங்களில் செக்பாய்ண்ட் அமைத்து வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு செக்பாய்ண்டிற்கும் ஒரு காவல் உதவியாளர் தலைமையிலான ஐந்து காவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைத்து மொத்தம் 250 காவல்துறையினர் 35 செக் பாயிண்ட்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது அனுமதி இன்றி வாகனங்களில் கட்டப்பட்ட கட்சி கொடிகளை அகற்றியும் வருகின்றனர். இந்த சோதனையானது பிப்ரவரி 27 ம் தேதி வரை நடைபெறும் என தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.