ஈரோடு இடைத்தேர்தல்; வினோதமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தலில் வினோதமான முறையில் சில்லறை காசு, செருப்பு மாலை, காலி சிலிண்டருடன் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்  செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த…

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தலில் வினோதமான முறையில் சில்லறை காசு, செருப்பு மாலை, காலி சிலிண்டருடன் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்  செய்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு அதற்கு பிப்ரவரி 27ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் இன்னும் ஓரிரு தினங்களில் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

234 வது முறை வேட்புமனு தாக்கல்:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல் ஆளாக தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுவரை 233 முறை வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அவர் 234ஆவது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பத்தாயிரம் ரூபாயை 10 ரூ நாணயங்களாக கொண்டு வந்த வேட்பாளர்:

அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியை சேர்ந்த காந்தியவாதியான ரமேஷ் என்பவர் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும் என்பதை உணர்த்தும்விதமாக வேட்பு மனு டெபாசிட்டுக்கான பத்தாயிரம் ரூபாயையும் பத்து ரூபாய் நாணயங்களாக அளித்து தராசுடன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

செருப்பு மாலையுடன் வேட்புமனு தாக்கல்:

கோவையை சேர்ந்த நூர் முகமது என்பவர் காலணி மாலையுடன் வேட்பு மனு தாக்கல் வந்திருந்தார். காலணியை மாலையாக அணிந்தபடியே சென்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். திருப்பூரை சேர்ந்த நாடாளும் மக்கள் கட்சியை சேர்ந்த தனலட்சுமி என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சிலிண்டருடன் வேட்பு மனு தாக்கல்:

தமிழக தன்னுரிமை கட்சியை சேர்ந்த அருள்ராம் என்பவர் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்த்தும் வகையில் சிலிண்டருடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.

பின்னோக்கி நடந்து வந்து வேட்பு மனு தாக்கல்

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மனிதன் என்பவர் நூதனமான உடை அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக பின்னோக்கி நடந்து வந்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.