ஈரோடு இடைத்தேர்தல்; பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவ படையினர் வருகை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக இரண்டு கம்பெனி துணை ராணுவ படையினர் வர உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டில்  நடைபெற உள்ள   சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையர்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக இரண்டு கம்பெனி துணை ராணுவ படையினர் வர உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டில்  நடைபெற உள்ள   சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இடைத் தேர்தல் குறித்த தேதிகளையும் அவர் அறிவித்தார். தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ வான திருமகன் ஈவேரா வின் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில்  238 வாக்குச்சாவடிகள் உள்ளது. மொத்தம் 2,26,876 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் – 1,10,713, பெண்கள் – 1,16,140, மூன்றாம் பாலினத்தவர் – 23 பேர்.

500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும்,  ஈரோடு நகராட்சி ஆணையர்தான் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும்  தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு   தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து தலைவர்களின் பெயர்கள், புகைப்படம் ஆகியவற்றை மறைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளது.

பணப்பட்டுவாடாவை தடுக்க முதலில் மூன்று நிலை கண்காணிப்பு குழுக்களையும், மூன்று பறக்கும் படைகளையும் தேர்தல் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. இதன் பின்னர்  கூடுதலாக மேலும் ஒரு பறக்கும் படையை அமைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டார்.

பறக்கும் படையினர்  தொகுதியின் எல்லைகளிலும், தொகுதிக்குள்ளாகவும் வாகன தணிக்கை மேற்கொண்டு 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக, ஆவணங்கள் இன்றி எடுத்து வரும் ரொக்க பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்வர் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இடைத்தேர்தலில்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக உள்ளூர் போலீசார் மட்டுமின்றி இரண்டு கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவ படையைச் சேர்ந்த 400 வீரர்கள் வரும் 13-ஆம் தேதி ஈரோடு வர உள்ளனர்.  வாக்குப்பதிவு நாள் முதல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.