துரோகத்தால் தான் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை தன் கைப்பிடியில் வைத்திருக்கிறார். துரோகம் எனும் கத்தியை எடுத்த பழனிச்சாமி துரோகத்தாலேயே வீழ்த்தப்படுவார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என மார்தட்டிக் கொண்டும், அதிருப்தி இருந்தும் 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இரட்டை இலை இருந்தும், பணபலம் இருந்தும் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை.
வரும் காலத்தில் அதிமுக ஒன்றிணையும். அதற்கான அறிகுறிகள் தான் தற்போது பார்த்து வருகிறோம். எடப்பாடி பழனிச்சாமி தனியாக கட்சியை ஆரம்பித்து வென்று காட்டினால் அன்று மார்தட்டிக் கொள்ளலாம். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவோம். அதிமுகவாக ஒன்றிணைவோம் என சொல்லவில்லை. தீய சக்தி திமுகவை எதிர்த்து ஓர் அணியில் கூட்டணியாக ஒன்றிணைவோம்.
தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம். ஏப்ரல் இறுதிக்குள்ளாக மாவட்டவாரியாக நிர்வாகிகளை சந்தித்து பணியை வேகப்படுத்தி வருகிறோம். தேனி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கள நிலவரங்களை ஆராய்ந்து வருகிறோம். திமுகவின் அமைச்சர்கள் தான் சூழ்ச்சி செய்து வருகிறார்கள்.சொந்த செலவில் சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள்.
1989-ல் இருந்து அமைச்சராக இருக்கும் பொன்முடி பேசியபேச்சு காட்டு மிராண்டித்தனமாகவும் அனைத்து அரசியல்வாதிகளும் தலைகுனியும் அளவில் இருக்கிறது. சுயநல நோக்கத்தோடு தான் திமுகவின் தொலைநோக்குத் திட்டங்கள் இருக்கிறது தவிரே வேறு ஒன்றுமில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதாரரீதியாக பெரிய அளவில் அவர்கள் குடும்பம் வளர்கிறது. வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுகிறார்கள் என பொய் பிரச்சாரத்தை ஏற்படுத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.







