கர்நாடக தேர்தலில் புலிகேசி நகரை குறி வைக்கும் இபிஎஸ் – ஓபிஎஸ்: புலிகேசி நகரின் முக்கியத்துவம் என்ன..?

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக வின் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் வேட்பாளர்களை களமிறக்கியுள்ள புலிகேசி நகர் தொகுதி குறித்து விரிவாக பார்ப்போம். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு…

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக வின் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் வேட்பாளர்களை களமிறக்கியுள்ள புலிகேசி நகர் தொகுதி குறித்து விரிவாக பார்ப்போம்.

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தற்போதைய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் பதவிக் காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும் அள்ளித் தெளித்து வருகின்றன.

கடந்த 13 ஆம் தேதி, இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், பாஜக கட்சிகள் பல்வேறு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை அறிவித்தன. இதனிடையே நேற்று, கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அன்பரசனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் இன்று, அதே தொகுதியில், கர்நாடக மாநில அதிமுக மாணவர் அணிச் செயலாளர் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும் கோலார் தங்கவயல் தொகுதியில் A.ஆனந்தராஜ் மற்றும்  காந்தி நகர் தொகுதியில் குமார் ஆகியோரை வேட்பாளர்களாக  ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

புலிகேசி நகர் தொகுதி :

புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வின் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில்  பாஜக சார்பில் முரளி போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் ஏ.ஆர் சீனிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டுமுறை புலிகேசி  சட்டமன்ற உறுப்பினராக இருந்த அகண்ட ஸ்ரீநிவாசனுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் சீட் வழங்கப்படாததால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தனித்து சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு  காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அகண்ட ஸ்ரீநிவாசன் 97,574 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

புலிகேசி நகர் தொகுதி பெங்களூரு வடக்கு மக்களவை தொகுதியில் உள்ளது. கடந்த  2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 2,31,913 பேர் ஆகும். இதில் 1,18,396 ஆண்கள் மற்றும் 1,13,480 பெண்கள். இவர்களில் இந்துக்கள் 67.4%, முஸ்லிம்கள் 35.9%, கிறிஸ்தவர்கள் 3.14%. ஆகும்.

தனித் தொகுதியான புலிகேசி நகரில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளதாக சொல்லப்படுகிறது. பெங்களூரு கிழக்கு ரயில் நிலையம் அல்லது கன்டோன்ட்மண்ட் ரயில் நிலைய பகுதிகளில் தமிழர்கள் கிட்டத்தட்ட 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பெங்களூர் மாநகர பகுதிக்குள் இந்த தொகுதி இருந்தாலும் அதிகமான குடிசைப் பகுதிகளை கொண்டுள்ளது.

இந்த தொகுதியில் வியாபாரம் செய்யக் கூடிய கொங்கு பகுதியை சார்ந்த தமிழர்களும், தமிழ் மற்றும் உருது முஸ்லிம்களும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். பட்டியலின மக்கள் , சிறுபான்மை மக்கள் மற்றும் தமிழர்கள் அதிகம் உள்ளதால் இந்த தொகுதி யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு இங்கு செல்வாக்கு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.