அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நாளை வருகிறார் இபிஎஸ்

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நாளை எடப்பாடி பழனிசாமி வருகை தரவுள்ளார். இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான…

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நாளை எடப்பாடி பழனிசாமி வருகை தரவுள்ளார்.

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, நாளை காலை 10 மணிக்கு எம்ஜிஆர் மாளிகைக்கு வருகை தருகிறார்.

தலைமைக் கழக வளாகத்தில் உள்ள கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் ஆகியோர் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அதிமுகவை ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வருவதற்காக கடந்த ஜூலை 11ஆம் தேதி அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது, ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு கலவரமானது. இதில், 47 பேர் காயமடைந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.